

மதுரை மேலமடையில் வசிக்கும் சலூன் கடைக்காரர் மோகன், தன்னுடைய மகளின் படிப்புக்காகச் சேர்த்து வைத்திருந்த 5 லட்ச ரூபாயை கரோனாவால் பாதிக்கப்பட்ட ஏழை, எளியவர்களுக்கு அரிசி, காய்கனி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் வழங்கச் செலவிட்ட செய்தி அனைவரும் அறிந்ததே.
இப்படிச் செலவிட்ட மோகனையும், அதற்குத் தந்தையைத் தூண்டிய மகள் நேத்ராவையும் பிரதமர் மோடி தனது ‘மனதின் குரல்’ நிகழ்ச்சி வாயிலாகப் பாராட்டினார்.
தொண்டு நிறுவனம் ஒன்று நேத்ராவை ஐ.நா. நல்லெண்ணத் தூதராக நியமித்திருப்பதாகக் கூறிப் பாராட்டியது. இதைத்தொடர்ந்து கிடைத்த ஊடக வெளிச்சம் காரணமாக, அந்த மாணவிக்கு நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பாராட்டுகளும், அன்பளிப்புகளும் குவிந்தன.
இந்நிலையில், திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரைச் சேர்ந்த முருகேசன் என்பவர் காசநோய் (டிபி) காரணமாக, தன்னுடைய எலும்புகள் மோசமாகப் பாதிக்கப்பட்டு கால்கள் ஊனமாகி விட்டதாகவும், மருத்துவ உதவி தேவைப்படுவதாகவும் மோகனுக்குக் கடிதம் எழுதியிருந்தார்.
இதைத் தொடர்ந்து முருகேசனை மதுரைக்கே வரவழைத்த மோகன், தன் மகள் நேத்ரா கையால் அவருக்கு ரூ.25 ஆயிரம் உதவித்தொகையைக் காசோலையாக வழங்கினார்.