புதுச்சேரியில் பொதுச்சேவை மையங்களில் ஆதார் சேவை இல்லாததால் தவிக்கும் மக்கள்

ஆதார் சேவைக்காக திருக்கனூரில் சேவை மையம் வந்து திரும்பிச் செல்லும் கிராம மக்கள்.
ஆதார் சேவைக்காக திருக்கனூரில் சேவை மையம் வந்து திரும்பிச் செல்லும் கிராம மக்கள்.
Updated on
1 min read

புதுச்சேரியில் பொதுச்சேவை மையங்களில் ஆதார் சேவைகள் மீண்டும் இயங்க அனுமதி தரப்படாததால் ஆதாரில் திருத்தம், செல்போன் எண் இணைப்பு ஆகிய சேவைகள் இல்லாமல் மக்கள் தவித்து வருகின்றனர்.

புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் புதுச்சேரி, காரைக்கால், மாஹே, ஏனாம் ஆகிய நான்கு பிராந்தியங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுச்சேவை மையங்கள் உள்ளன. இவற்றுடன் இணைந்து 30-க்கும் மேற்பட்ட ஆதார் சேவை மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த மையங்களில் பிறப்பு, இறப்பு, வருவாய்த்துறை சான்றுகள், பாஸ்போர்ட், பான் அட்டை, தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி எடுத்தல் ஆகியவற்றை பொதுமக்கள் நேரடியாக ஆன்லைன் சேவை மூலம் பெறலாம்.

ஆதார் அட்டையில் திருத்தம், செல்போன் எண்கள் இணைத்தல் ஆகியவை ஆதார் சேவை மையம் மூலம் செய்யப்பட்டன.

இந்த நிலையில் கரோனா பரவலைத் தடுக்க கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமலானது. இதனால் பொதுச்சேவை மையங்கள் மூடப்பட்டன. பின்னர் ஊரடங்குத் தளர்வில் பொதுச்சேவை மையங்கள் திறக்கப்பட்டன. பிறப்பு - இறப்புச் சான்றிதழ்கள், வருவாய்த்துறை சான்றுகள் தரப்படுகின்றன. ஆனால், ஆதார் சேவைப் பணிகள் நடக்கவில்லை. ஆதார் அட்டையில் திருத்தம் செய்வதில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. முக்கியமாக கிராமப் பகுதிகளில் அதிக அளவு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

அதேநேரத்தில், புதுச்சேரியில் உள்ள தபால் நிலைய தலைமை அலுவலகம், பிஎஸ்என்எல் அலுவலகம், சில வங்கிகளில் ஆதார் சேவைகள் நடைபெறுகின்றன. அவர்களுக்கு அனுமதி தந்துவிட்டு பொதுச்சேவை மையத்துக்கு அனுமதி தரப்படவில்லை என்பதால் கிராம மக்கள் அதிகம் அலைக்கழிக்கப்படும் சூழல் உள்ளது.

வங்கிகளில் தற்போது கூட்டம் அதிகமாக உள்ளதால் அங்கு ஆதார் சேவைக்குச் செல்லும் மக்களுக்குத் தகுந்த வழிகாட்டுதல் கிடைப்பதில்லை என்றும் குறிப்பிடுகின்றனர்.

பொதுச்சேவை மையங்களின் வட்டாரங்களில் விசாரித்தபோது, "நாடு முழுவதும் ஆதார் சேவை மையங்கள் செயல்பட அனுமதி தரப்பட்டுள்ளது. புதுச்சேரியில் மட்டும் தரப்படவில்லை. அதே நேரத்தில் விதிவிலக்காக சில இடங்களில் அனுமதி தரும் குழப்பச் சூழல் உள்ளது. பிஎஃப் வங்கிக் கணக்கில் பணம் எடுக்க ஆதார் எண்ணில் செல்போன் இணைத்திருக்க வேண்டும். அரசு சேவைகளில் ஆதார் கட்டாயம். இதுபோல் பல உதவிகள் கிடைக்காமல் கிராம மக்கள் அதிக பாதிப்பில் உள்ளனர். அரசு இவ்விஷயத்தில் தெளிவான முடிவை எடுத்து அனைத்து இடங்களிலும் ஆதார் சேவை கிடைக்க நடவடிக்கை எடுப்பது அவசியம்" என்கின்றனர்.

அத்துடன் ஆதார் சேவை மையங்களில் பணியில் இருந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் பணியில்லாததால் வருமானமின்றி பாதிப்பில் உள்ள சூழலும் நிலவுகிறது. "ஊரடங்குத் தளர்வில் மால், உணவகங்கள், மதுபானக்கடைகள், மார்க்கெட், பூங்காக்கள் திறந்துள்ள சூழலில் ஆதார் எடுக்க ஒரு விரலை மட்டும் பயன்படுத்திப் பணிபுரிவதற்கு அனுமதி தராதது சரியல்ல" என்று தெரிவித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in