

சென்னை காவல்துறையில் முதல் துக்க நிகழ்வாக கரோனா பாதுகாப்புப் பணியின்போது தொற்றுக்கு ஆளாகி சிகிச்சையில் இருந்த மாம்பலம் காவல் ஆய்வாளர் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
தமிழகத்தில் கரோனா தொற்று ஏற்பட்டது முதல் அதைக் கட்டுப்படுத்தும் முயற்சியில் தமிழக அரசு ஈடுபட்டது. மார்ச் 24-ம் தேதி ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது முதல் களப்பணியில் முன்னணிப் படை வீரர்களாக மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவப் பணியாளர்கள், காவல்துறையினர், தூய்மைப் பணியாளர்கள், அரசு ஊழியர்கள் உள்ளிட்டோர் ஈடுபட்டு வருகின்றனர்.
இதில் மக்கள் பணியில் ஈடுபட்ட மதிப்புமிகு ஊழியர்கள் பலரை சென்னை இழந்துள்ளது. மருத்துவர்கள், செவிலியர்கள், சட்டப்பேரவை உறுப்பினர் என உயிர்காக்கும், சேவைப் பணியில் ஈடுப்பட்டிருந்த பலரும் உயிரிழந்தனர். மற்றொரு புறம் காவல் பணியில் இருந்த 600-க்கும் மேற்பட்டவர்கள் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். இதில் காவல்துறையினரைக் கவலையில் ஆழ்த்தும் விதமாக சென்னை காவல்துறையில் முதல் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது.
சென்னை மாம்பலம் காவல் நிலைய சட்டம் ஒழுங்கு ஆய்வாளராகப் பணியாற்றியவர் பாலமுரளி (47). பணியில் திறமையானவர் எனப் பெயரெடுத்தவர். இவர் கரோனா பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வுப் பணியில் ஈடுபட்டிருந்தார். கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட அவர் கடந்த 5-ம் தேதி தனிமைப்படுத்தப்பட்டார்.
இந்நிலையில் 2 நாளில் காய்ச்சல் அதிகமான நிலையில் கடந்த 7-ம் தேதி ராஜீவ்காந்தி அரசு பொதுமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் 11-ம் தேதி பாலமுரளியின் உடல் நிலை மோசமானது. உயிர்காக்க தடுப்பூசி தேவைப்பட்ட நிலையில் சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் அவரது சொந்த செலவில் 3 தடுப்பூசிகளை ரூ.2.25 செலவில் தருவித்துக் கொடுத்தார்.
அதன் பின்னர் அவரது உடல்நிலை தேறி வந்தது. அனைவரும் நிம்மதி அடைந்திருந்த வேளையில் திடீரென இன்று காலை முதல் பாலமுரளியின் உடல் நிலை மோசமானது. சுவாசப் பிரச்சினை ஏற்பட்டதால், அவருக்கு வென்டிலேட்டர் சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும், சிகிச்சை பலனின்றி இன்று மாலை பாலமுரளி உயிரிழந்தார்.
சென்னை காவல்துறையில் முன்கள வீரராக கிருமிக்கு எதிரான யுத்தத்தில் முதல் களப்பலியாக ஆய்வாளர் பாலமுரளி தன்னுயிரை இழந்துள்ளார். இது காவலர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வேலூரைச் சொந்த ஊராகக் கொண்ட பாலமுரளி, வடபழனி காவலர் குடியிருப்பில் வசித்து வந்தார். அவருக்கு மனைவியும், 13 வயதில் மகளும், 9 வயதில் மகனும் உள்ளனர்.
2000-ம் ஆண்டு நேரடியாக உதவி ஆய்வாளராகக் காவல்துறையில் இணைந்த அவர் பின்னர் ஆய்வாளராகப் பதவி உயர்வு பெற்று நீலாங்கரை, கே.கே.நகர் மற்றும் மாம்பலம் காவல் நிலையத்தில் பணியாற்றினார். அவரது தந்தையும் காவல் ஆய்வாளராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர் ஆவார்.
பாலமுரளி, தனக்குக் கரோனா தொற்று ஏற்படும்வரை மாம்பலம் பகுதியில் பொதுமக்களிடையே கரோனா விழிப்புணர்வுப் பிரச்சாரத்தைச் செய்து வந்துள்ளார். இளம் வயதில் ஆய்வாளரான அவரது இழப்பால் சென்னை காவல்துறை சோகத்தில் ஆழ்ந்துள்ளது.