இ-பாஸ் இருந்தாலும் புதுச்சேரிக்குள் அனுமதியில்லை; எல்லையில் பல கி.மீ. தொலைவுக்கு அணிவகுத்த வாகனங்கள்

பிரதிநிதித்துவப் படம்.
பிரதிநிதித்துவப் படம்.
Updated on
1 min read

கரோனா அதிகரிப்பால் இ-பாஸ் இருந்தாலும் புதுச்சேரிக்குள் வாகனங்கள் இன்று அனுமதிக்கப்படவில்லை. அதனால் புதுச்சேரி எல்லையில் வாகனங்கள் பல கி.மீ. தொலைவுக்கு அணிவகுத்து நின்றன.

புதுச்சேரியில் தொடர்ந்து கரோனா தொற்று அதிகரித்து வருகிறது. அதிக அளவாக, புதுச்சேரியில் ஒரே நாளில் இன்று (ஜூன் 17) 30 பேருக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. இதையடுத்து, அமைச்சரவைக் கூட்டம் கூடி தமிழகத்தைச் சேர்ந்தோர் புதுச்சேரிக்குள் நுழையத் தடை விதிக்க முடிவு எடுக்கப்பட்டு இன்று அமலுக்கு வந்தது.

புதுச்சேரியின் பிரதான எல்லைகளான முள்ளோடை, கோரிமேடு, கனகசெட்டிக்குளம், மதகடிப்பட்டு, திருக்கனூர் ஆகிய பகுதிகளில் கடும் சோதனை செய்யப்பட்டது.

முக்கியமாக, புதுச்சேரி வாகன எண், புதுச்சேரியைச் சேர்ந்தோர் என்பதற்கான அடையாள அட்டை, அரசு ஊழியர்கள் அடையாள அட்டை, ஆதார் அட்டை இருப்போர் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். அத்தியாவசியப் பொருட்கள் ஏற்றி வந்த வாகனங்கள் அனுமதிக்கப்பட்டன. முக்கியமாக, மருத்துவத் தேவைக்காக வருவோரை அனுமதித்தனர். அவர்களுக்கு உண்மையில் நோய் உள்ளதா என்பதையும் பரிசோதித்தே அனுமதித்தனர்.

முக்கியமாக, இ-பாஸ் வைத்திருந்தாலும் புதுச்சேரிக்குள் அனுமதிக்க மறுத்துவிட்டனர். இதனால் புதுச்சேரி எல்லைப் பகுதிகளில் பல கி.மீ. தொலைவுக்கு வாகனங்கள் இன்று காத்திருந்தன.

தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் தமிழகத் தொழிலாளர்களுக்கும் கட்டுப்பாடு

புதுவையில் கரோனா தொற்று தடுப்பு நடவடிக்கை சம்பந்தமான ஆலோசனைக் கூட்டம் இன்று காலை வருவாய்த்துறை அமைச்சர் ஷாஜகான் தலைமையில் புதுவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் தொழில் துறை இயக்குநர், தொழில்முனைவோர் மற்றும் தொழிற்சாலை உரிமையாளர்கள் கலந்துகொண்டனர்.

இக்கூட்டத்தில் அண்டை மாநிலத் தொழிலாளர்களால் கரோனா தொற்று ஏற்படாத வகையில் புதுச்சேரி தொழில் நிறுவனங்களில் பணிக்கு அமர்த்த வேண்டும், அதற்கான கட்டுப்பாடுகளை அண்டை மாநிலத் தொழிலாளர்களுக்கு செய்து கொடுக்க முடியவில்லை என்றால் மாற்று வழி காண வேண்டும் என்றும் அமைச்சர் வலியுறுத்தினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in