Last Updated : 17 Jun, 2020 04:54 PM

 

Published : 17 Jun 2020 04:54 PM
Last Updated : 17 Jun 2020 04:54 PM

நியாயவிலைக் கடை பணியாளர்களை மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் சேர்க்க வேண்டும்; மாநில சிறப்புத் தலைவர் கோரிக்கை

கருப்பு சட்டை அணிந்து பணி செய்த ஊழியர்கள்

கடலூர்

நியாயவிலைக் கடை பணியாளர்களை மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் சேர்க்க வேண்டும் என, தமிழ்நாடு அரசு நியாயவிலைக் கடை பணியாளர் சங்கத்தின் மாநில சிறப்புத் தலைவர் கு.பாலசுப்பிரமணியன் கோரிக்கை விடுத்துள்ளார்.

தமிழ்நாடு அரசு நியாயவிலைக் கடை பணியாளர் சங்கம் சார்பில் அத்தியாவசிய பொருள்கள் அனைத்தையும் 100 சதவீதம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலம் தழுவிய அளவில் இன்று (ஜூன் 17) ஒருநாள் கருப்புச்சட்டை அணிந்து பணி செய்தனர்.

அதன் ஒருபகுதியாக கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் மாநில பொதுச் செயலாளர் ஜெயச்சந்திரராஜா தலைமையில் கருப்பு சட்டை அணிந்து நியாயவிலைக் கடையில் பணிபுரிந்தனர். இதில் கலந்து கொண்ட மாநில சிறப்பு தலைவர் கு.பாலசுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

"மாநிலம் முழுவதும் உள்ள நியாயவிலைக் கடை பணியாளர்கள் மக்களை சந்தித்து தினமும் அவர்களுக்கு பணி செய்து வருகின்றனர். அதில் ஏழு பேர் கரோனா வைரஸ் நோய் தொற்றினால் பாதிக்கப்பட்டு ஒருவர் இறந்துவிட்டார். மற்றவர்கள் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அதேபோல விபத்துகளில் உயிரிழந்தவர்களுக்கு எந்தவிதமான உதவித்தொகையும் அரசாங்கம் வழங்கவில்லை. எனவே, நியாயவிலைக் கடை பணியாளர் சங்கங்கைளை சேர்ந்த ஊழியர்களை காப்பீட்டு திட்டத்தில் சேர்க்க வேண்டும். மேலும், பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு உரிய நஷ்ட ஈடு வழங்க அரசு முன்வர வேண்டும்.

சரியான எடையில் பொருட்களை வழங்க வேண்டும். புழுத்துப்போன அரிசியை வழங்கியுள்ளனர். அதனை பொதுமக்கள் யாரும் வாங்கவில்லை. மேலும், 500 ரூபாய்க்கு விற்கப்பட்ட மளிகை தொகுப்பு தரமற்றதாக உள்ளது. அதனையும் அரசு திரும்பப் பெற்றுக் கொள்ள வேண்டும்.

ஒரு தரமற்ற நிர்வாகம் பொது விநியோகத் திட்டத்தில் நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது. சரியான எடையில் பொருட்களை வட்ட வழங்கல் அலுவலர்கள் வழங்காமல் அவர்கள் பணியாளர்களை மிரட்டி வருகின்றனர். லோடு இறக்குவதற்கு ரூ.700 தந்தால்தான் லோடு இறக்குவோம் என மிரட்டுகின்றனர்" என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x