முதலமைச்சரின் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் தனியார் மருத்துவமனைகளில் கரோனா சிகிச்சை: உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்

சென்னை உயர் நீதிமன்றம்: கோப்புப்படம்
சென்னை உயர் நீதிமன்றம்: கோப்புப்படம்
Updated on
1 min read

தனியார் மருத்துவமனைகளில், முதலமைச்சரின் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழும், தேசிய சுகாதாரப் பாதுகாப்புத் திட்டத்தின் கீழும் கரோனாவுக்கு சிகிச்சை பெறலாம் என தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

"கரோனா பாதித்தவர்களுக்கு இலவசமாக மருத்துவ சிகிச்சை வழங்க வேண்டும். கரோனாவைக் கட்டுப்படுத்த அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு உதவியாக மாநில அளவிலும், மாவட்ட அளவிலும் குழுக்கள் அமைக்க வேண்டும். கரோனா பாதித்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்டோருக்கு முழு உடல் கவசம் வழங்க வேண்டும்" எனக் கோரி வழக்கறிஞர் ஜிம்ராஜ் மில்டன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், "தனியார் மருத்துவமனைகளில் கரோனா சிகிச்சைக்கான செலவை அரசே ஏற்குமா? அதிக கட்டணம் வசூலிப்பது தொடர்பாக புகார் அளிக்க ஏதேனும் வசதிகள் செய்யப்பட்டுள்ளனவா? அதிக கட்டண வசூல் குறித்த புகார்கள் மீது எடுத்த நடவடிக்கைகள் என்ன?" என அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது.

அதேபோல அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் உள்ள படுக்கை வசதிகள் குறித்துத் தெரிவிக்கவும் அரசுக்கு உத்தரவிட்டிருந்தது.

இந்த வழக்கு இன்று (ஜூன் 17) மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது, தமிழக சுகாதாரத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் தாக்கல் செய்த அறிக்கையில், ''தமிழகத்தில் 44 அரசு ஆய்வகங்களிலும், 33 தனியார் ஆய்வகங்களிலும் என 77 ஆய்வகங்களில் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. ஜூன் 11 ஆம் தேதி நிலவரப்படி 6 லட்சத்து 55 ஆயிரத்து 257 பேருக்குப் பரிசோதனை செய்யப்பட்டதில் 38 ஆயிரத்து 716 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுபவர்களுக்கு 5,000 ரூபாய் முதல் 7,500 ரூபாய் வரை கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தீவிரமாகத் தொற்று பாதிக்கப்பட்டவர்களுக்கு 15 ஆயிரம் ரூபாய் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

கரோனா சிகிச்சைக்கு 25 சதவீதப் படுக்கைகளை ஒதுக்கி வைக்க தனியார் மருத்துவமனைகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழும், தேசிய சுகாதாரப் பாதுகாப்புத் திட்டத்தின் கீழும் கரோனாவுக்கு சிகிச்சை பெறலாம்'' எனக் குறிப்பிட்டுள்ளார்.

மத்திய சுகாதாரத் துறை தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், ''தனியார் மருத்துவமனைகள் மாநில அரசின் கட்டுப்பாட்டில் வருவதால், கரோனா சிகிச்சைக்குத் தனியார் மருத்துவமனைகளுக்குக் கட்டணம் நிர்ணயிப்பது தொடர்பாக தமிழக அரசு தான் பதிலளிக்க வேண்டும்'' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சுப்பையா மற்றும் கிருஷ்ணன் ராமசாமி அமர்வு, விசாரணையை ஜூன் 19-ம் தேதிக்குத் தள்ளிவைத்தது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in