

திருநெல்வேலியில் கரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த மூதாட்டி இன்று உயிரிழந்தார். இதையடுத்து மாவட்டத்தில் கரோனா நோய்த் தொற்றால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 2-ஆக அதிகரித்துள்ளது.
திருநெல்வேலி மாவட்டம் பரப்பாடியை சேர்ந்த மூதாட்டி ஒருவர் கடந்த 12-ம் தேதி கரோனாவால் பாதிக்கப்பட்டு, திருநெல்வேலி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில் அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று அவர் உயிரிழந்தார். அவரது சடலம் திருநெல்வேலி சிந்துபூந்துறையிலுள்ள மின்மயானத்துக்கு கொண்டு செல்லப்பட்டு எரியூட்டப்பட்டது.
மாவட்டத்தில் கரோனாவுக்கு ஏற்கெனவே ஒருவர் உயிரிழந்திருந்த நிலையில் தற்போது மேலும் ஒருவர் மரணமடைந்துள்ளார்.
திருநெல்வேலி மாவட்டத்தில் கரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இன்று ஒரே நாளில் மட்டும் 28 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து மாவட்டத்தில் பாதிப்பு எண்ணிக்கை 535 ஆக அதிகரித்துள்ளது. நேற்று மும்பையிலிருந்து திருவனந்தபுரம் வழியாக வந்த பலருக்கு தொற்று உறுதியாகியுள்ளது.