

"கரோனாவை எப்படி அடக்குவது என்று ஆலோசிக்கிறோம்" என்று கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் மதுரையில் செய்தியாளர்களிடம் கூகையில், ‘‘கோடை காலத்திலும் மதுரையில் குடிநீர் பிரச்சனையே இல்லை என்ற நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கு அரசு மேற்கொண்ட குடிநீர் ஆதார திட்டங்களே முக்கியg காரணம். ‘கரோனா’ வந்த ரேஷன் கடை ஊழியர்களுக்குத் தேவையான நிவாரணங்கள் கிடைக்க ஏற்பாடு செய்கிறோம்.
அவர்களுக்கு நோய்த் தொற்று ஏற்படாமல் இருக்க முகக்கவசம், கிருமிநாசினி வழங்குகிறோம். அதிமுக ஆட்சியில்தான் ரேஷன் கடை பணியாளர்களுக்கு அதிகமான ஊதியமும், காப்பீடு திட்டத்தையும் வழங்கியுள்ளோம்.
திமுக ஆட்சியில் ஊதியம் உயர்வு என்று கூறினார்களே தவிர உயர்த்திக் கொடுக்கவில்லை. தற்போது ‘கரோனா’ ஊரடங்கில் அவர்களுக்கு ரூ.2500 சிறப்பு ஊதியம், தினப்படி ரூ.200 வழங்கி உள்ளோம். அவர்கள் அரசுக்கு விசுவாசமாக உள்ளனர். ஒரு சில ஒய்வு பெற்ற ரேஷன் கடை ஊழியர்கள் போராட்டம் என அறிக்கை விடுவதற்கு நாங்கள் பதில் கூற முடியாது.
மதுரையில் கரோனா கட்டுப்பாட்டுக்குள் இருந்தது. வெளியூரில் இருந்து வந்தவர்கள் மூலம் தற்போது மீண்டும் பரவி வருகிறது. இதை எப்படி அடக்குவது என்று ஆலோசிக்கிறோம்.
நிலைமை கைமீறிப் போகும்போது ஊரடங்கு போட வேண்டியதாகிவிடுகிறது. ஆனால் சிலர் விமர்சனம் செய்யும்போது நோய் பரவினால், 'கரோனா பரவுகிறது' என்று கூறுகிறார்கள். அதைத் தடுக்க ஊரடங்கு போட்டால் 'ஊரடங்கு போடுகிறார்கள்' என்கிறார்கள். வேறு என்ன தான் செய்ய முடியும்?
மருத்துவர்கள் மட்டுமில்லாது ஒவ்வொரு மாவட்டத்திலும் ஆட்சியர் முதல் தூய்மைப்பணியாளர்கள் வரை உயிரைப் பனையம் வைத்து வேலை செய்து கொண்டு இருக்கிறார்கள். அரசுக்கு அவப்பெயர் ஏற்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் எதிர்கட்சியினர் விமர்சனம் செய்கின்றனர். மனசாட்சியுள்ளவர்கள், அப்படிச் செய்ய மாட்டார்கள்.
அரசு கரோனா பாதிப்பு விவரங்களை மறைக்கவில்லை. அந்த எண்ணம் கடுகளவும் இல்லை. அதை மறைப்பதில் அரசுக்கு என்ன நன்மை இருக்கிறது? வெளிப்படையாகச் சொன்னால்தான் மக்கள் விழிப்புணர்வுடன் இருப்பார்கள். மதுரையில் திணமும் 1,500 பேருக்கு கரோனா பரிசோதனை செய்கிறோம், ’’ என்றார்.