

பழநியில் கரோனா பாதிக்கப்பட்ட பெண் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், வீட்டு உரிமையாளர் அனுமதிக்க மறுத்ததால் அதிகாரிகள் தலையிட்டு பேச்சுவார்த்தையில் தீர்வு கண்டனர்.
திண்டுக்கல் மாவட்டம் பழநி அருகே தட்டான்குளம் பகுதியைச் சேர்ந்த 49 வயது பெண்ணுக்கு கரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டது. இவர் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு பின் குணமடைந்து நேற்று இரவு பழநியிலுள்ள வீட்டிற்கு திரும்பினார்.
வீட்டின் உரிமையாளர் அந்தப் பெண்ணை வீட்டிற்குள் அனுமதிக்க மறுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து அதிகாரிகளிடம் புகார் அளிக்கப்பட்டது. பழநி சார் ஆட்சியர் உமா, வட்டாட்சியர் பழனிச்சாமி மற்றும் சுகாதாரத்துறை அலுவலர்கள், போலீஸார் வீட்டு உரிமையாளரிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
வீட்டைவிட்டு வெளியில் வராமல் 14 நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்வதாகவும், அதன்பின் வீட்டை காலிசெய்து விடுவதாகவும் பாதிக்கப்பட்ட பெண் உறுதியளித்ததையடுத்து வீட்டின் உரிமையாளர் அவரை அனுமதித்தார்.
கரோனா பாதிக்கப்பட்டவர்களிடம் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என ஒவ்வொரு முறையும் அலைபேசியில் பேச முற்படும்போதும விழிப்புணர்வு பேச்சு இடம் பெறுகிறது.
‘‘நாம் நோயுடன் போராட வேண்டும் நோயாளியுடன் அல்ல, அவரிடம் பாகுபாடு காட்டாதீர்கள்,’’ என்ற குரல் ஒலிக்கிறது. இருந்தபோதும் குணமடைந்து திரும்பிய பெண்ணை வெறுத்து வீட்டிற்குள் அனுமதிக்க மறுத்த வீட்டு உரிமையாளரின் செயல் கண்டிக்கத்தக்கது என அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.