Published : 17 Jun 2020 02:20 PM
Last Updated : 17 Jun 2020 02:20 PM

முதல்வரின் தனிச் செயலர் கரோனா தொற்றால் மறைவு: அரசுப் பணியில் உள்ள யாரையும் இனி இழக்கக்கூடாது: ஸ்டாலின் இரங்கல்

முதல்வரின் தனிச்செயலர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்ததற்கு திமுக தலைவர் ஸ்டாலின் தனது இரங்கலைத் தெரிவித்துள்ளார். மருத்துவர்கள், அரசுப் பணியில் உள்ள யாரையும் நாம் இழக்கக்கூடாது என அவர் இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் சாதாரண மக்கள் முதல் விஐபிக்கள் வரை அனைவரும் கரோனா வைரஸால் பாதிக்கும் நிலை உள்ளது. சமீபத்தில் திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகன் கரோனாவால் உயிரிழந்தார். அதிமுக எம்எல்ஏ பழனி கரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

அகில இந்திய அளவில் டெல்லி சுகாதாரத்துறை அமைச்சர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். மத்தியப் பிரதேச ஆளுநர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வென்டிலேட்டர் சிகிச்சையில் உள்ளார்.

இந்நிலையில் இன்னொரு உயிரிழப்பாக தமிழக முதல்வரின் தனிச்செயலர் தாமோதரன் கரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார். இதுகுறித்து இன்று திமுக தலைவர் ஸ்டாலின் இரங்கலை தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

ஸ்டாலின் முகநூல் பதிவு:

“முதல்வர் அலுவலக தனிச் செயலாளர் தாமோதரன் கரோனாவால் மறைவெய்தி இருப்பது மிகுந்த வேதனையளிக்கிறது. அவரது மறைவிற்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். தலைமைச் செயலகம் உள்ளிட்ட மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களிலும் பணியாற்றும் அதிகாரிகள் மற்றும் ஊழியர்களின் பாதுகாப்பை உறுதி செய்திட வேண்டும்.

"பரிசோதனை மற்றும் புதிய கரோனா நோய்த் தொற்று குறித்த தினசரி சதவீத வாரியான விவரங்கள் ஏதும் இல்லாத நிலையில் சென்னையில் "நோய்த் தொற்று வளைவில்" (Epi curve) அசாதாரணமாக திடீரென்று "நோய்த் தொற்றுக்குள்ளானவர்களின்" எண்ணிக்கை குறைவதைப் புரிந்துகொள்ள முடியவில்லை" என்று தொற்று நோய் ஆராய்ச்சி மையத்தின் மருத்துவர் பிரப்தீப் கவுர் கூறியிருப்பது மிகவும் உன்னிப்புடன் கவனிக்கத்தக்கது.

இதற்கு உரிய விளக்கத்தை அளிப்பதோடு - கரோனா நோய்த் தொற்று நடவடிக்கையில் அரசு மிகுந்த வெளிப்படைத்தன்மையுடன் நடந்துகொள்ள வேண்டும்.

காவல்துறையினர், மருத்துவர்கள், செவிலியர்கள், மக்கள் நல்வாழ்வுத் துறை ஊழியர்கள் மற்றும் தூய்மைப் பணியாளர்கள் உள்பட கரோனா தடுப்புப் பணியில் ஈடுபட்டுள்ள அனைவருக்கும் முழு பாதுகாப்பு ஏற்பாடுகளும், சுய பாதுகாப்பிற்கு தேவைப்படும் மருத்துவ உபகரணங்களும் வழங்கிட வேண்டும் எனவும், இனி ஒரு முன்களப்பணியாளரையோ, அரசு ஊழியரையோ இழக்கும் நிலை ஏற்படக்கூடாது என்றும் வலியுறுத்துகிறேன்”.

இவ்வாறு ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x