

கரோனா தொற்று பாதித்த காவல்துறையினருக்கு அரசு அறிவித்தவாறு ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும் என, மதிமுக பொதுச் செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான வைகோ வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக, வைகோ இன்று (ஜூன் 17) வெளியிட்ட அறிக்கை:
"அனைவரையும் அச்சுறுத்திக்கொண்டு இருக்கின்ற கொடிய கொள்ளை நோய் கரோனாவிலிருந்து மக்களைப் பாதுகாக்க மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மைப் பணியாளர்கள், அரசுப் பணியாளர்கள், காவல்துறையினர் தங்கள் உயிர்களைப் பற்றிக் கவலைப்படாது மரணமே நேரினும் அதனை எதிர்கொள்ளும் மனத் துணிவுடன் இரவு பகலாகத் தொண்டாற்றி வருகின்றனர்.
கால நேரமின்றிப் பணியாற்றும் காவல்துறையினருக்கு கரோனா தொற்று நோய் பாதித்தால் இரண்டு லட்ச ரூபாய் நிவாரணமாக வழங்கப்படும் என்று ஏப்ரல் மாதம் தமிழ்நாடு அரசு அறிவித்தது.
இதுவரையில் 600க்கும் மேற்பட்ட காவல்துறையினர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். பலர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். ஆனால், அரசாங்கம் அறிவித்தவாறு நிவாரணம் எதுவும் தரவில்லை. சொன்ன வாக்குறுதியை தமிழ்நாடு அரசு காப்பாற்றாவிடில், அரசின் நம்பகத்தன்மை பாதிக்கப்படுவதோடு, அரசுப் பணிகள் ஆங்காங்கே முடங்குவதற்கும் வாய்ப்பு இருக்கிறது என்பதை உணர்ந்து அறிவித்தவாறு நிவாரணம் வழங்க வேண்டும்".
இவ்வாறு வைகோ தெரிவித்துள்ளார்.