ஊரடங்கை ரத்து செய்யக் கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு; மனுவைத் தள்ளுபடி செய்து ரூ.50 ஆயிரம் அபராதம் விதிப்பு

ஊரடங்கை ரத்து செய்யக் கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு; மனுவைத் தள்ளுபடி செய்து ரூ.50 ஆயிரம் அபராதம் விதிப்பு
Updated on
1 min read

கரோனா தடுப்பு நடவடிக்கையாக நீட்டிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவை ரத்து செய்யக் கோரிய வழக்கில் நீதிமன்ற நேரத்தை வீணடித்ததாக ரூ.50 ஆயிரம் ரூபாய் அபராதத்துடன் சென்னை உயர் நீதிமன்றம் மனுவைத் தள்ளுபடி செய்தது.

சென்னை கோவிலம்பாக்கத்தைச் சேர்ந்த தமிழக முற்போக்கு மக்கள் கட்சியைச் சேர்ந்த இம்மானுவேல் கடந்த மார்ச் மாதம் மனு ஒன்றை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்.

அவரது மனுவில், “இந்தியாவில் மார்ச் 24-ல் ஊரடங்கு அறிவிக்கப்பட்டு, படிப்படியாக நீட்டித்து மார்ச் 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. பலர் வருவாய் இழந்துள்ள நிலையில், என்னைப் போல குறைவான வருவாய் ஈட்டுவோர், கடுமையான சிரமத்தில் உள்ளனர்.

சீனா, இத்தாலி போன்ற நாடுகள் முழு ஊரடங்கை அறிவித்த நிலையில், தென்கொரியா, சுவீடன் போன்ற நாடுகள் ஊரடங்கை அறிவிக்காமலேயே வைரஸ் தொற்று பரவாமல் நடவடிக்கை எடுத்துத் தடுத்துள்ளது என்பதையும் சுட்டிக்காட்டுகிறேன்.

கரோனா வைரஸுக்குத் தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும்வரை அது நம்முடன்தான் இருக்கும் என்பதால், தனிமனித இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும், முகக்கவசம் அணியவேண்டும் போன்ற அரசு விதித்துள்ள நிபந்தனைகளைக் கடைப்பிடித்தாலே வைரஸ் தொற்றில் இருந்து தற்காத்துக்கொள்ளலாம்.

அதனால் ஊரடங்கை நீட்டித்து மார்ச் 17-ம் தேதி மத்திய அரசு பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யவேண்டும்” என மனுவில் கோரிக்கை வைத்திருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் சுப்பையா, கிருஷ்ணன் ராமசாமி அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் இதேபோன்ற கோரிக்கையுடன் தொடரப்பட்ட வழக்குகள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாகவும், மனுதாரர் அரசியல் கட்சியைச் சேர்ந்தவர் என்பதால் அரசியல் காரணங்களுக்காக வழக்குத் தொடரப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.

இதைப் பதிவு செய்த நீதிபதிகள் மனுவைத் தள்ளுபடி செய்ததுடன், நீதிமன்ற நேரத்தை வீணடித்ததாக மனுதாரருக்கு 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in