

விவசாயத்துக்காக மேட்டூர் அணையில் இருந்து திறந்துவிடப்பட்ட தண்ணீர் மேட்டூர், சேலம், கரூர், திருச்சி, புதுக்கோட்டை வழியாக, நேற்று தஞ்சை மாவட்டம் கல்லணையை அடைந்துள்ளது. அடுத்து திருவாரூர், நாகை மாவட்டங்களில் காவிரி வெள்ளம் பாயும்.
இதேபோல நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் தாமிரபரணி ஆறு, தென்காசி மாவட்டத்தில் (குற்றாலம்) சிற்றாறு, குமரி மாவட்டத்தில் பாசனக் கால்வாய்களில் தண்ணீர் பாய்கிறது. இது கோடைக்காலம் என்பதாலும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை என்பதாலும் ஆற்றுக்கு குளிக்கச் செல்லும் இளைஞர்கள், மாணவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.
சுற்றுலாத்தலங்களில் தடை இருந்தாலும் ஆற்றின் போக்கில் அந்தந்த ஊர்க்காரர்களும், அருகில் உள்ள ஊர்க்காரர்களும் ஆற்றில் குளிக்கிறார்கள். இதனால் கரோனா பரவலாம் என்றும் சிலர் பகீர்த் தகவலைக் கிளப்புகிறார்கள்.
இதுகுறித்து சிவகங்கையைச் சேர்ந்த பொது மருத்துவர் ஃபரூக் அப்துல்லாவிடம் கேட்டபோது, "காலராதான் ஆற்று நீர் வழியாகப் பரவும். கரோனா நீர் வழியாகப் பரவாது. எனவே, ஆற்றில் குளிப்பவர்களுக்கு கரோனா அச்சம் தேவையில்லை. அதே நேரத்தில் தனிமனித இடைவெளியைப் பின்பற்றி குளிக்க வேண்டும்.
கரோனா தொற்று உள்ளவர் நெருக்கமாக நின்றபடி தண்ணீரை நம் மீது கொப்பளித்தாலோ, இருமினாலோ நோய் பரவும் வாய்ப்புள்ளது. கோடைக் காலங்களில் நீர்நிலைகளில் மூழ்கி சிறுவர்கள் இறக்கும் சம்பவங்கள் அதிக அளவில் நடைபெறுகின்றன. எனவே, பெரியவர்கள் உதவியில்லாமல் சிறுவர்கள் நீர்நிலைகளில் நீராடுவதைத் தவிர்க்க வேண்டும்" என்றார் அவர்.