Published : 17 Jun 2020 12:07 PM
Last Updated : 17 Jun 2020 12:07 PM

10 மாவட்ட நீதிமன்றங்கள் திறப்பது குறித்து உயர் நீதிமன்றம் ஆலோசனை

சென்னை

முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் ஜூன் 30 வரை நீதிபதிகள் வீடுகளில் இருந்து பணியாற்ற அனுமதித்துள்ள சென்னை உயர் நீதிமன்றம், 10 மாவட்டங்களில் நீதிமன்றங்களைத் திறப்பது குறித்து இன்று ஆலோசிக்கிறது.

கரோனா பரவலைத் தடுக்க சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் ஜூன் 19-ம் தேதி முதல் 30-ம் தேதி வரை முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இது சம்பந்தமாக சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி தலைமையிலான மூத்த நீதிபதிகள் அடங்கிய நிர்வாகக் குழு கூடி, விவாதித்தது. இக்குழு பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில், தலைமைப் பதிவாளர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

அதில், சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் உள்ள சிறப்பு நீதிமன்ற நீதிபதிகள் தவிர, மற்ற நீதிமன்ற நீதிபதிகள் தங்கள் வீடுகளில் இருந்து பணியாற்றலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், நான்கு மாவட்ட நீதிமன்றங்களில் ஊழியர்களின் எண்ணிக்கையைக் குறைப்பது குறித்து சம்பந்தப்பட்ட முதன்மை நீதிபதிகள் முடிவு செய்து கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல, தருமபுரி, நீலகிரி, கிருஷ்ணகிரி, திருவாரூர், தேனி, ராமநாதபுரம், நாகப்பட்டினம், கரூர், சிவகங்கை, அரியலூர், பெரம்பலூர், ஈரோடு, புதுக்கோட்டை, கடலூர், நாமக்கல், திண்டுக்கல், விருதுநகர், கன்னியாகுமரி, திருப்பூர் ஆகிய 19 மாவட்டங்களிலும் தற்போது போல தொடர்ந்து செயல்படவும் உயர் நீதிமன்ற நிர்வாகக்குழு உத்தரவிட்டுள்ளதாக தலைமைப் பதிவாளர் விடுத்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

இதுதவிர கோவை, மதுரை, தஞ்சாவூர், சேலம், தூத்துக்குடி, திருச்சி, திருநெல்வேலி, திருவண்ணாமலை, வேலூர், விழுப்புரம் ஆகிய 10 மாவட்டங்களில் நீதிமன்றங்களைத் திறக்க அனுமதிப்பது தொடர்பாக மாவட்ட முதன்மை நீதிபதிகளுடன் தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி காணொலியில் இன்று ஆலோசனை நடத்த உள்ளார்

நீதிமன்றங்களில் செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் குறித்து மாவட்ட முதன்மை நீதிபதிகள் அறிக்கை அனுப்பவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x