

பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக ஆளுநர் கே.ரோசய்யா, முதல்வர் ஜெயலலிதா, திமுக தலைவர் கருணாநிதி உள்ளிட்டோர் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
பிரதமர் மோடிக்கு நேற்று 65-வது பிறந்த நாளாகும். இதையொட்டி அவருக்கு ஆளுநர் ரோசய்யா அனுப்பிய வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது:
பிறந்த நாள் கொண்டாடும் தங்களுக்கு எனது இதயங்கனிந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். தங்களது சிறப்பான தலைமை, அணுகுமுறை, அர்ப்பணிப்பு ஆகியவை நாட்டை வளர்ச்சிப் பாதைக்கு அழைத்துச் செல்கிறது. இந்தியாவை உலகின் தலைமை நாடாக கொண்டுவர முயற்சிக்கும் உங்களது நடவடிக்கைக்கு மக்கள் துணை நிற்கின்றனர். தாங்கள் நீண்ட காலம், நல்ல ஆரோக்கியத்துடன் வாழ்ந்து நாட்டு மக்களுக்கு சேவையாற்ற வாழ்த்துகிறேன்.
முதல்வர் ஜெயலலிதா:
மகிழ்ச்சிகரமான இந்த பிறந்த நாளில் தங்களுக்கு மிகச் சிறப்பான எதிர்காலம் அமைய மனப்பூர்வமான வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். நீங்கள் நீண்ட காலம், நல்ல ஆரோக்கியத்துடன் நாட்டுக்கு சேவையாற்ற பிரார்த்திக்கிறேன்.
திமுக தலைவர் கருணாநிதி:
எனது இதயங்கனிந்த பிறந்த நாள் வாழ்த்துகளை ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக்கொள் கிறேன். இந்த நாள்போல என்றும் இனிமையாக அமைய வாழ்த்துகள். மதம், ஜாதி, மாநிலம், மொழி கடந்து அனைத்து மக்களின் எதிர்பார்ப்புகளையும் பூர்த்தி செய்யும் வகையில் நல்லாட்சியை வழங்க வேண்டும்.