

கரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக முதல்வர் பழனிசாமியிடம் எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் 5 கேள்விகளை எழுப்பியிருந்தார். இந்நிலையில், பால்வளத் துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி வெளியிட்டுள்ள அறிக்கை:
கரோனா தடுப்பிலும், குணப்படுத்துவதிலும், மரண சதவீதத்தை குறைத்ததிலும், பரிசோதனைகளை அதிகப்படுத்தியதிலும், நாட்டுக்கே வழிகாட்டும் திறமை மிக்க மாநிலமாக தமிழகத்தை முதல்வர் பழனிசாமி முன்னெடுத்து வருகிறார். ஆனால் இந்தியாவில் உள்ள அனைத்து எதிர்க்கட்சிகளுக்கும் மாறாக கரோனாவிலும் அரசியல் செய்து மக்களைக் குழப்பியும், மக்களுக்காக அரும்பாடுபடும் அரசு ஊழியர்கள் மனச்சோர்வு அடையும் வகையிலும் திமுக அரசியல் செய்து வருகிறது.
பொறுப்புணர்வு கொண்ட எந்த ஒரு எதிர்க்கட்சியும் இது போன்ற அரசியலை நடத்தியதில்லை. முதல்வர் மீது அவதூறுகளையும், பழிகளையும் சுமத்தி மலிவான அரசியலில் ஈடுபடும் ஸ்டாலின் தமிழக அரசுக்கு எதிராக, சூழ்ச்சி செய்வதையும், பினாமி அறிக்கைகள் விடுவதையும் நிறுத்திக் கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.