

பொதுமக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் விநியோகிப்பதில் புகார்கள் வந்தால் நியாயவிலைக்கடை பணியாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் செல்லூர் கே.ராஜூ எச்சரித்துள்ளார்.
சென்னை காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளிலும், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களின் சில பகுதிகளிலும் வரும் ஜூன் 19-ம் தேதி முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கூட்டுறவுத் துறையால் மேற்கொள்ளப்படவேண்டிய நடவடிக்கைகள் குறித்து அமைச்சர் செல்லூர் கே.ராஜூ ஆய்வு செய்தார்.
அப்போது அமைச்சர் பேசியதாவது:
முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள இந்த 4 மாவட்டங்களில் உள்ள சில பகுதிகளில் கரோனா வைரஸ் நிவாரண நிதியாக அனைத்து அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்களுக்கும் தலா ரூ.1000 ரொக்கம் வரும் ஜூன் 22 முதல் அவரவர் இருப்பிடத்திற்கே சென்று வழங்கப்பட வேண்டும்.
மேலும், இம்மாவட்டங்களில் ஏற்கெனவே செயல்படும் பண்ணைப் பசுமை நுகர்வோர் கடைகள் மற்றும் நகரும் பண்ணைப் பசுமை நுகர்வோர் கடைகள் மூலம் காய்கறிகள் அனைத்து பகுதி மக்களுக்கும் தொடர்ந்து விநியோகிக்க வேண்டும்.
கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் வசிக்கும் குடும்ப அட்டைதாரர்களுக்கு அவர்கள் இல்லத்துக்கே சென்று நியாயவிலைக் கடை பணியாளர்கள் அத்தியாவசிய பொருட்கள் வழங்க வேண்டும்.
பயிர்க்கடன்
பயிர்க்கடனை பொறுத்தவரை கடந்த 2011 முதல் இந்தாண்டு ஜூன் 31-ம் தேதி வரை 95 லட்சத்து 8 ஆயிரத்து 269 பேருக்கு ரூ.51 ஆயிரத்து 499 கோடியே 6 லட்சம் வழங்கப்பட்டுள்ளது. சிறு வியாபாரிகளான பெட்டிக்கடை வைத்திருப்போர், பூ, பழம், காய்கறி மற்றும் இளநீர் போன்ற சிறு வியாபாரம் செய்யும் சிறு வணிகர்களுக்கு விதிகளுக்கு உட்பட்டு அதிகபட்சமாக ரூ.50 ஆயிரம் வரை சிறுவணிகக் கடன் வழங்கப்படுகிறது. கடந்த ஏப்ரல் 1 முதல் ஜூன் 12-ம் தேதி வரை 10 ஆயிரத்து 68 நபர்களுக்கு ரூ.30 கோடியே 28 லட்சம் அளவுக்கு சிறுவணிகக் கடன் வழங்கப்பட்டுள்ளது.
மேலும், தகுதி வாய்ந்த மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு கடன் வழங்க அறிவுரை வழங்கப்பட்டு ஏப்ரல் 1 முதல் கடந்த ஜூன் 10-ம் தேதி வரை 7ஆயிரத்து 887 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.61 கோடியே 67 லட்சம் அளவுக்கு கடன் வழங்கப்பட்டுள்ளது. நியாய விலைக் கடை பணியாளர்கள் எவ்வித புகாருக்கும் இடமின்றி பணியாற்ற வேண்டும். புகார்கள் ஏதேனும் வந்தால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இக்கூட்டத்தில், கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் கி.பாலசுப்ரமணியம், சிறப்புப்பணி அலுவலர் க.ராஜேந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.