

கரோனா ஊரடங்கு காரணமாக பணப்புழக்கம் இல்லாததால் டாஸ்மாக் கடைகளில் 57 சதவீதம் விற்பனை சரிந்துள்ளது.
தமிழகம் முழுவதும் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகள் உள்ளன. இங்கு வார நாட்களில் சராசரியாக ரூ.90 கோடியும், வார இறுதி நாட்களில் ரூ.100 கோடி முதல் ரூ.110 கோடியும் விற்பனை நடைபெற்று வந்தது.
இந்நிலையில் ஊரடங்கால் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன. இதற்கிடையே, சென்னை மாவட்டம் தவிர மற்ற பகுதிகளில் டாஸ்மாக் கடைகள் கடந்த மாதம் திறக்கப்பட்டன. நீண்ட நாட்கள் கழித்து மதுக்கடைகள் திறக்கப்பட்டதால், முதல் சில நாட்களில் விற்பனை அமோகமாக இருந்தது. ஆனால் அதன் பிறகு விற்பனை குறையத் தொடங்கியது. குறிப்பாக, 45 சதவீதம் பீர் வகைகள், 12 சதவீதம் பிற மதுபான வகைகள் என மொத்தம் 57 சதவீத மதுபானங்களின் விற்பனை சரிவடைந்துள்ளதாக டாஸ்மாக் வட்டாரங்களில் கூறப்படுகிறது.
இதுதொடர்பாக, டாஸ்மாக் அதிகாரி ஒருவர் கூறியதாவது:
ஊரடங்கு காரணமாக தொழில்கள் சரியாக நடைபெறாத காரணத்தால் பணமின்றி பலரும் தவித்துவருகின்றனர். இதனால், மதுவாங்க வருபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து வருகிறது.
ஊரடங்கு அமல்படுத்தியவுடன் டோக்கன் அளித்து மதுபானங்களை அளித்து வந்தோம். தற்போது, கூட்டம் பெரிதாக வராத காரணத்தால் அவ்வப்போது வருபவர்களுக்கு மதுபானங்கள் அளிக்கப்படுகின்றன. டோக்கன் முறை பெரும்பாலான கடைகளில் கடைபிடிக்கப்படுவதில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.