

தென்காசி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
பாதிக்கப்பட்டோரில் பெரும்பாலானோர் சென்னையில் இருந்து வந்தவர்கள் ஆவர். கடந்த சில நாட்களில் சென்னையில் இருந்து மட்டும் 2713 பேர் தென்காசி மாவட்டத்துக்கு வந்துள்ளனர்.
வெளிநாடுகளில் இருந்து 107 பேர், வெளி மாநிலங்களில் இருந்து 2202 பேர், சென்னை தவிர பிற மாவட்டங்களில் இருந்து 2230 பேர் என மொத்தம் 7252 பேர் வந்துள்ளனர். இவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளளர்.
இ-பாஸ் பெற்று சென்னையில் இருந்து வருபவர்கள் அரசு கண்காணிப்பில் தனிமைப்படுத்தப்பட்டு, அவர்களுக்கு கரோனா பரிசோனை செய்யப்படுகிறது. கரோனா தொற்று இல்லாதவர்கள் மட்டும் 28 நாட்கள் வீட்டுத் தனிமைக்கு அனுப்பப்படுகின்றனர்.
வெளிமாநிலங்கள், வெளி மாவட்டங்களில் இருந்து யாரேனும் வந்திருந்தால் கட்டுப்பாட்டு அறைக்கு 04633 290548 என்ற எண்ணில் பொதுமக்கள் தகவல் தெரிவிக்கலாம் என்று தென்காசி மாவட்ட நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.
தென்காசி மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 24 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இவர்களில் 23 பேர் சென்னையில் இருந்தும், ஒருவர் மகாராஷ்டிரா மாநிலத்தில் இருந்தும் வந்தவர்கள். இவர்கள் அனைவரும் ஆலங்குளம் அருகே உள்ள தனியார் கல்லூரியில் அரசு கண்காணிப்பில் தனிமைப்படுத்தப்பட்டு இருந்தவர்கள்.
புதிதாக கரோனா தொற்று கண்டறியப்பட்டவர்கள் கடங்கனேரி, ஆலங்குளம் புரட்டசி நகர், ராமநாதபுரம், வட்டாலூர், ஏ.பி.நாடானூர், முத்துகிருஷ்ணப்பேரி, அனந்தநாடார்பட்டி, கிடாரங்குளம், மருதப்பபுரம், மீனாட்சிபுரம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள். தென்காசி மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 170 ஆக உயர்ந்துள்ளது.
இவர்களில் 92 பேர் குணமடைந்து வீடு திரும்புயுள்ளனர்.