

தமிழகத்திலும் திருக் கோயில்களைப் பக்தர்கள் வழிபாட்டுக்குத் திறக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி கும்பகோணம் ஜோதிமலை இறைப்பணி திருக்கூட்டத்தின் சார்பில் இன்று கும்பகோணம் பகுதியில் உள்ள திருக்கோயில்கள் முன்பாக அறப் போராட்டம் நடைபெற்றது.
''காய்கனி, மளிகை, பால் பொருட்கள் எவ்வளவு அத்தியாவசியமோ அதைப் போலத்தான் திருக்கோயில்கள் திறப்பதும் பக்தர்களுக்கு அத்தியாவசியமானது. புதுச்சேரி, கர்நாடகா, ஆந்திரா, கேரளா ஆகிய மாநிலங்களைப் போல, தமிழகத்திலும் திருக் கோயில்களைப் பக்தர்கள் வழிபாட்டுக்குத் திறக்க வேண்டும்
நோய்த் தொற்றுப் பரவல் அதிகம் உள்ள சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்களைத் தவிர தமிழகத்தின் ஏனைய மாவட்டங்களில் உள்ள திருக்கோயில்களை பக்தர்கள் வழிபாட்டுக்கு உடனடியாகத் திறக்க வேண்டும்'' என வலியுறுத்தி கும்பகோணம் ஜோதிமலை இறைப்பணி திருக்கூட்டத்தின் சார்பில் இன்று போராட்டம் நடைபெற்றது.
திருக்கோயில்கள் முன்பாக கைகளில் பதாகை ஏந்தி அறப் போராட்டம் நடத்தினர்.
புகழ்பெற்ற உப்பிலியப்பன் கோயில் மற்றும் ராகு ஸ்தலமான திருநாகேஸ்வரம் நாகநாதர் கோயில் ஆகிய கோயில்களின் முன்பாக திருக்கூட்டத்தைச் சேர்ந்த அடியவர்கள், ஒருங்கிணைப்பாளர் ஹரிபாபு தலைமையில், கோயில்களைத் திறக்க வலியுறுத்தி பதாதைகள் ஏந்தி, அறவழிப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.