

சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் 1.74 ஏக்கர் ஊருணி தனியார் அறக்கட்டளைக்கு தாரைவார்க்கப்பட்டதாக திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் புகார் தெரிவித்துள்ளன.
திருப்புவனம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி அருகே பல நூறு ஆண்டுகள் பழமையான மட்டை ஊருணி உள்ளது. 1.74 ஏக்கருள்ள இந்த ஊருணி நகரின் முக்கிய நீராதாரமாக இருந்தது. இந்த ஊருணிக்கு வைகை ஆற்றில் இருந்து தண்ணீர் கொண்டு வர கால்வாய் அமைக்கப்பட்டுள்ளது.
நகர் விரிவாக்கத்தால் 50 ஆண்டுகளுக்கு மேலாக ஊருணிக்குள் குப்பைகள் கொட்டப்பட்டன. இதில் ஊருணி இருந்த சுவடு தெரியாமல் மறைந்து சமதளப்பரப்பானது. இதையடுத்து 2000-ம் ஆண்டில் இருந்து அப்பகுதியில் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் வாரச்சந்தை நடத்தப்பட்டது.
இந்நிலையில் கடந்த ஆண்டு மாவட்ட ஆட்சியர் ஜெ.ஜெயகாந்தன் முயற்சியால் ஊருணி மீட்கப்பட்டு, வாரச்சந்தை வேறு இடத்திற்கு மாற்றப்பட்டது.
இந்நிலையில் அந்த ஊருணியை பாதுகாக்க சிலர் திருப்புவனம் ஸ்ரீமார்க்கண்டேய தீர்த்தம் பாதுகாப்பு அறக்கட்டளை என்ற அமைப்பை ஏற்படுத்தி பத்திரப்பதிவு செய்துள்ளனர். இதற்கு தலைவராக அயோத்தி என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
இதற்கு திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மேலும் திமுக மாவட்டத் துணைச் செயலாளர் சேங்கைமாறன் தலைமையிலான திமுகவினர் பத்திரப்பதிவில் முறைகேடு நடந்துள்ளதாக கூறி மாவட்ட எஸ்பி ரோஹித்நாதனிடம் புகார் கொடுத்துள்ளனர். இதுகுறித்து விசாரிக்க திருப்புவனம் போலீஸாருக்கு எஸ்பி உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து திமுக மாவட்டத் துணைச் செயலாளர் சேங்கைமாறன் கூறுகையில், ‘ ‘அ’ பதிவேட்டில் ஊருணி புறம்போக்கு நிலம் என்று உள்ளது. அதை தனியார் அறக்கட்டளை பெயரில் பதிவு செய்துள்ளனர். இது சட்டப்படி தவறு. இதுகுறித்து நாங்கள் புகார் செய்ததும் ஏற்கனவே ஜூன் 8-ம் தேதி செய்த பத்திரப்பதிவை ரத்து செய்தனர். மீண்டும் ஜூன் 12-ம் தேதி பத்திரப்பதிவு செய்துள்ளனர்.
அரசு ஊருணியை தனியார் நிர்வகிக்க முடியாது. அந்த ஊருணியும், அதை சுற்றியுள்ள இடங்களும் பல கோடி ரூபாய் பெறும். மேலும் காலப்போக்கில் அறக்கட்டளை நிர்வாகிகளே ஊருணி மற்றும் அதை சுற்றியுள்ள இடங்களை ஆக்கிரமித்துவிடுவர், என்று கூறினர்.
திருப்புவனம் ஸ்ரீமார்க்கண்டேய தீர்த்தம் பாதுகாப்பு அறக்கட்டளை சட்ட ஆலோசகர் ராஜா கூறுகையில், ‘‘பேரூராட்சி மைய பகுதியில் இருப்பதால் சிலர் ஆக்கிரமிக்க வாய்ப்புள்ளது. அதை தடுத்து ஊருணியை பாதுகாப்பதே எங்கள் நோக்கம். அதற்காக தான் இந்த குழுவை ஏற்படுத்தியுள்ளோம். உரிமை கொண்டாட மாட்டோம்,’’ என்றார்.