சோழவந்தான் பெண் சிசு கொலையில் பாட்டியின் ஜாமீன் மனு தள்ளுபடி

சோழவந்தான் பெண் சிசு கொலையில் பாட்டியின் ஜாமீன் மனு தள்ளுபடி

Published on

சோழவந்தான் அருகே பெண் சிசு எருக்கம்பால் கொடுத்து கொலை செய்யப்பட்ட வழக்கில் குழந்தையின் பாட்டிக்கு ஜாமீன் வழங்க நீதிமன்றம் மறுத்துவிட்டது. குழந்தையின் தந்தைக்கு ஜாமீன் வழங்கப்பட்டது.

மதுரை மாவட்டம் சோழவந்தான் பூ மேட்டுத்தெருவைச் சேர்ந்தவர் தவமணி (35). இவரது மனைவி சித்ரா (26). இவர்களுக்கு 3 மகள்கள் உள்ளனர். மே 10-ம் தேதி சித்ராவுக்கு மேலக்கால் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் 4-வது பெண் குழந்தை பிறந்தது.

5 நாட்களுக்கு பிறகு உடல் நலக்குறைவால் குழந்தை இறந்து விட்டதாக கூறி பழைய காவலர் குடியிருப்பு பின்னால் கருவேல மரம் அருகே புதைத்தனர்.

விசாரணையின் போது 4-வதும் பெண் குழந்தையாக பிறந்ததால் எருக்கம் பால் கொடுத்து குழந்தையை கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து குழந்தையின் பாட்டி பாண்டியம்மாள் (60), தந்தை தவமணி ஆகியோரை போலீஸார் கைது செய்தனர்.

இருவரும் ஜாமீன் கேட்டு மதுரை மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுவை நீதிபதி நசீமாபானு இன்று விசாரித்தார். பின்னர் பாண்டியம்மாளின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தும், தவமணிக்கு ஜாமீன் வழங்கியும் நீதிபதி உத்தரவிட்டார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in