

கோவை இஎஸ்ஐ மருத்துவமனையில் கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர் உட்பட 11 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினர்.
கோவை போத்தனூர் பகுதியைச் சேர்ந்த 49 வயதுடைய ஆண், மூச்சுக்குழாயில் ஏற்பட்ட புற்றுநோய் காரணமாக கோவை அரசு மருத்துவமனையின் தொண்டை, மூக்கு, காது சிகிச்சைப் பிரிவில் கடந்த 8-ம் தேதி அனுமதிக்கப்பட்டார். அவரது உடல்நிலையைக் கருத்தில்கொண்டு உடனடியாக 'டிரக்யாஸ்டமி' அறுவை சிகிச்சை செய்யப்பட்டு, தனிமைப்படுத்தப்பட்டார்.
பிறகு, இவருக்கு மேற்கொண்ட பரிசோதனையில் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. அவருக்குச் சிகிச்சை அளித்த மருத்துவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு, அவர்களுக்கும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில், மருத்துவர்களுக்குத் தொற்று இல்லை எனத் தெரியவந்தது.
கரோனா சிகிச்சைக்காக நோயாளி சிங்காநல்லூர் இஎஸ்ஐ மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு தொடர் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று (ஜூன் 16) அவர் சிகிச்சை முடிந்து நலமுடன் வீடு திரும்பினார்.
இதுதவிர, இன்று ஒரே நாளில் 11 பேர் இஎஸ்ஐ மருத்துவமனையில் இருந்து சிகிச்சை முடிந்து வீடு திரும்பினர். அங்கிருந்து இதுவரை மொத்தம் 308 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 54 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதுவரை, இஎஸ்ஐ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றவர்களில் யாருக்கும் உயிரிழப்பு ஏற்படாத சூழலில், அங்கு சிறப்பான சிகிச்சை அளித்து வருவதாக மருத்துவனையின் டீன் ஏ.நிர்மலா மற்றும் மருத்துவப் பணியாளர்களுக்குப் பாராட்டு தெரிவித்து சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் கடிதம் அனுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.