

பெட்ரோல், டீசலை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டு வர மத்திய அரசு முயன்று வருவதாக தமிழக பாஜக முன்னாள் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் கோவையில் இன்று (ஜூன் 16) செய்தியாளர்களிடம் கூறியதாவது:
"பிரதமராக மோடி இரண்டாவது முறையாகப் பொறுப்பேற்று ஓராண்டு நிறைவடைந்துள்ளது. தமிழ்ப் பண்பாட்டின் மீது மிகப் பெரிய மதிப்பும், மரியாதையும் வைத்துள்ள மோடி, தமிழர் பண்பாடு, கலாச்சாரம், மேன்மையை உலகெங்கும் கொண்டு சென்றுள்ளார். தமிழகத்துக்கு ஒரே ஆண்டில் பல மருத்துவக் கல்லூரிகளைத் தந்துள்ளார்.
விலைவாசியைக் கட்டுக்குள் வைத்துள்ளது, 100 நாள் வேலைவாய்ப்புத் திட்டக் கூலியை அதிகரித்தது, கிராம மக்களுக்கு பாதுகாப்பான குடிநீர் விநியோகம், காவிரி நடுவர் மன்றம், விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் நிதியுதவி என மத்திய பாஜக அரசின் சாதனைகள் அதிகம். அரசின் சாதனைகளை விளக்கும் புத்தகத்தை மக்களிடம் விநியோகிக்க உள்ளோம்.
கரோனா சிறப்பு நிதியாக சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கு ரூ.3 லட்சம் கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. கோவையில் ஜூன் மாதம் முதல் வாரத்தில் மட்டும் ரூ.145 கோடி சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கு வங்கிக் கடனுதவி வழங்கப்பட்டுள்ளது.
சிறுவாணி அணையிலிருந்து தமிழகத்துக்கு வரும் தண்ணீரை கேரள அரசு தடுக்கிறது. இதை இங்குள்ள கம்யூனிஸ்ட் கட்சிகள் தட்டிக்கேட்கவில்லை. அதேபோல, கம்யூனிஸ்ட் கட்சிகளுடன் கூட்டணியில் உள்ள திமுக, காங்கிரஸ் கட்சிகளும் மவுனமாக உள்ளன. கேரள அரசுடன் மோதல் போக்கை மேற்கொள்ளாமல், பேச்சுவார்த்தை மூலம் இப்பிரச்சினைக்குத் தீர்வு காண மாநில அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
கோதாவரி - காவிரி நதிகளை இணைக்க மத்திய அரசு உரிய நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. பெட்ரோல், டிசல் விலையை ஜிஎஸ்டியின் கீழ் கொண்டு வர வேண்டும் என்பதுதான் மத்திய அரசின் நோக்கம். பல மாநில அரசுகள் இதற்குத் தடையாக உள்ளன. எனினும், பெட்ரோல் - டிசலை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டு வர மத்திய அரசு முயன்று வருகிறது.
மின்சாரத் திருட்டைத் தடுத்து, மின் இழப்பை தவிர்ப்பதே மத்திய அரசின் நோக்கமாகும். விவசாயத்துக்கான இலவச மின்சாரத் திட்டத்தை மத்திய அரசு ஒருபோதும் ரத்து செய்யாது.
கரோனா இறப்பு விவகாரத்தில் புள்ளி விவரங்களில் சிறு பிழை இருந்துள்ளதை தமிழக அரசே ஒப்புக்கொண்டு, சரி செய்துள்ளது. ஆனால், திமுக தலைவர் ஸ்டாலின் கரோனா விவகாரத்தை அரசியலாக்குகிறார். இறை நம்பிக்கை உடையவர்களுக்கு சமூக நலன்தான் பிரதான நோக்கமாகும்.
சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் கரோனா பரவல் அதிகம் இருப்பதால் வழிப்பாட்டுத் தலங்களைத் திறக்க வேண்டாம் என்று தமிழக அரசு தீர்மானித்துள்ளது. இது ஏற்கத்தக்க முடிவுதான்".
இவ்வாறு சி.பி.ராதாகிருஷ்ணன் கூறினார்.
அப்போது, பாஜக மாநிலப் பொதுச் செயலாளர் வானதி சீனிவாசன், இளைஞரணி தேசிய துணைத் தலைவர் ஏ.பி.முருகானந்தம், மாவட்டத் தலைவர் ஆர்.நந்தகுமார் மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர்.