உதவிப் பொறியாளருக்கு கரோனா தொற்று எதிராலி: வேலூர் மாநகராட்சி அலுவலகத்தில் பொதுமக்கள் நுழையத் தடை

பிரதிநிதித்துவப் படம்
பிரதிநிதித்துவப் படம்
Updated on
1 min read

வேலூர் மாநகராட்சி 'ஸ்மார்ட் சிட்டி' திட்ட உதவிப் பொறியாளருக்கு கரோனா தொற்று உறுதியானதால் பொதுமக்கள் யாரும் வரும் நாட்களில் மாநகராட்சி அலுவலகத்துக்குள் வந்து செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

வேலூர் மாவட்டத்தில் கரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 230-ஐக் கடந்துவிட்டது. வேலூர் மாநகராட்சியில் கடந்த 10 நாட்களில் கரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது. இதையடுத்து, நகரில் உள்ள காய்கறி, மளிகைக் கடைகள் காலை 6 மணி முதல் பகல் 3 மணி வரை மட்டும் திறந்திருக்க வியாபாரிகள் முடிவு செய்துள்ளனர்.

வேலூர் சிஎம்சியில் உள்ள கரோனா வார்டில் சிகிச்சை பெற்று வந்த சென்னை மற்றும் திருவண்ணாமலை மாவட்டம் போளூரைச் சேர்ந்த இருவர் நேற்று (ஜூன் 15) உயிரிழந்தனர். இதற்கிடையில், வேலூர் மாநகராட்சி 'ஸ்மார்ட் சிட்டி' திட்ட உதவிப் பொறியாளர் ஒருவருக்கு இன்று (ஜூன் 16) கரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட தகவல் மாநகராட்சி அதிகாரிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இதையடுத்து, மாநகராட்சி அலுவலகத்தில் ஆணையர் சங்கரன் தலைமையில் அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில், மாநகராட்சி நல அலுவலர் மருத்துவர் சித்ரசேனா, மாநகராட்சி மண்டல உதவி ஆணையர்கள், சுகாதார அலுவலர்கள் பங்கேற்றனர்.

இந்தக் கூட்டம் தொடர்பாக அதிகாரிகள் கூறும்போது, "உதவிப் பொறியாளருக்கு கரோனா தொற்று உறுதியானதால் மாநகராட்சி ஆணையர் உள்ளிட்ட 40 பேருக்கு பிசிஆர் பரிசோதனைக்கான மாதிரிகள் சேகரிக்கப்பட்டுள்ளன.

மாநகராட்சி அலுவலகத்தில் பொதுமக்கள் வந்து செல்லத் தடை விதிக்கப்பட்டதுடன் கோரிக்கை தொடர்பான மனுக்களை அலுவலக வாசலில் உள்ள பெட்டியில் போட்டுச் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வாரத்தில் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் மாநகராட்சி அலுவலகம் இயங்காது. அந்த நாட்களில் மாநகராட்சி அலுவலகம், மண்டல அலுவலகங்களில் கிருமிநாசினி தெளிப்புப் பணி நடைபெறும்.

மேலும், ஒவ்வொரு பிரிவிலும் 50 சதவீதப் பணியாளர்களுடன் செயல்படுவது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. பிற மாவட்டங்களில் இருந்து பணிக்கு வருபவர்கள் யாரும் தற்காலிகமாக வரவேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது" என்று தெரிவித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in