

தெற்கு ரயில்வேயில் சரக்கு ரயில்களின் பாதுகாவலருக்கான தேர்வில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 5 பேர் மட்டுமே தேர்வு செய்யப்பட்டிருப்பது, தமிழர்களுக்கு எதிரான திட்டமிட்ட புறக்கணிப்பு என, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.
தெற்கு ரயில்வே துறையில், பதவி உயர்வு அடிப்படையில் சரக்கு ரயில் பாதுகாவலருக்கான பணிக்கு 96 பேரை தேர்ந்தெடுக்க சில மாதங்களுக்கு முன் ஆன்லைன் தேர்வுகள் நடைபெற்றன. இதில், தமிழகத்திலிருந்து 3,000க்கும் அதிகமானோர் தேர்வு எழுதியிருந்தனர். இதன் முடிவுகள் சமீபத்தில் வெளியிடப்பட்டன. அதில், தமிழகத்திலிருந்து வெறும் 5 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றிருப்பது தெரியவந்தது. மேலும், பெரும்பாலான இடங்களில் வட இந்தியர்கள் தேர்ச்சி பெற்றதும் தெரியவந்தது.
இதையடுத்து, இத்தேர்வில் தமிழர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டிருப்பதாக பாமக நிறுவனர் ராமதாஸ், மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் ஆகியோர் குற்றம் சாட்டியிருந்தனர்.
இந்நிலையில், இது தமிழர்களுக்கு எதிரான திட்டமிட்ட புறக்கணிப்பு என, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக, மு.க.ஸ்டாலின் இன்று (ஜூன் 16) தன் ட்விட்டர் பக்கத்தில், "தெற்கு ரயில்வேயில் சரக்கு ரயில்களின் பாதுகாவலருக்கான தேர்வில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 5 பேர் மட்டுமே தேர்வு செய்யப்பட்டுள்ளனர் என்பது அதிர்ச்சியளிக்கிறது.
இது தமிழர்களுக்கு எதிரான திட்டமிட்ட புறக்கணிப்புக்கான மற்றுமோர் ஆதாரம்.
இந்த ஆட்சேர்ப்பு முறைமையை மறு ஆய்வுக்கு உட்படுத்துவதோடு சமூக நீதியையும் உறுதி செய்ய வேண்டும் என மத்திய அமைச்சர் பியூஷ் கோயலைக் கேட்டுக் கொள்கிறேன்" எனப் பதிவிட்டுள்ளார்.