Published : 16 Jun 2020 01:35 PM
Last Updated : 16 Jun 2020 01:35 PM

அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு நீட் தேர்வில் உள் ஒதுக்கீடு: தமிழக பாஜக தலைவர் வரவேற்பு

அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு நீட் தேர்வில் உள் ஒதுக்கீடு வழங்க தமிழக அரசு முன்வந்துள்ளதற்கு தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் வரவேற்பு தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக, எல்.முருகன் இன்று (ஜூன் 16) வெளியிட்ட அறிக்கை:

"நீட் தேர்வு இந்தியா முழுவதும் நடைபெற்று வருகிறது. இதிலும் சராசரி விகித அடிப்படையில் பார்க்கும்போது தமிழகத்தில்தான் அதிக எண்ணிக்கையில் மாணவர்கள் நீட் தேர்வில் பங்கேற்கிறார்கள். இந்த ஆண்டு இந்தியா முழுவதும் ஏறத்தாழ 15 லட்சத்து 65 ஆயிரம் மாணவர்கள் நீட் தேர்வு எழுத உள்ள நிலையில், தமிழகத்தில் ஏறத்தாழ 84 ஆயிரம் மாணவர்கள் நீட் தேர்வு எழுத இருக்கிறார்கள்.

இதில் அரசுப் பள்ளி மாணவர்கள் ஆயிரக்கணக்கில் தேர்ச்சி பெற்றாலும் மதிப்பெண்கள் அடிப்படையில் போதுமான மருத்துவ இடங்களைப் பெற இயலவில்லை. இந்த நிலை நீட் தேர்வு அமல்படுத்துவதற்கு முன்பிருந்தே நீடித்து வந்தது குறிப்பிடத்தக்கது.

நீட் தேர்வில் இட ஒதுக்கீடு கடைப்பிடிக்கப்படுவதால் சமூக நீதி கடைப்பிடிக்கப்படுகிறது. இப்போது அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு உள்ஒதுக்கீடு வழங்கும் நிலையில் ஏழை எளிய குடும்பத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கும் வாய்ப்பு உருவாகி உள்ளது. இனி நீட் தேர்வுகளில் அரசுப் பள்ளி மாணவர்கள் அதிக அளவில் பங்கேற்பது உறுதி.

ஒரே ஆண்டில் பிரதமர் நரேந்திர மோடி, தமிழகத்திற்கு 11 புதிய மருத்துவக் கல்லூரிகள் தொடங்க அனுமதியும் அதற்குரிய நிதியும் வழங்க ஆவன செய்துள்ளார். இதன் மூலம் தமிழகத்தில் மருத்துவ மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க இருக்கிறது. இப்போது இருப்பதை விட மேலும் 1,500 இடங்கள் கூடுதலாக உருவாக உள்ளது. இந்த நிலையில் உள் ஒதுக்கீடு நம் நோக்கத்தின் அடிப்படையில் நல்ல பலனைத் தரும் என்பது உறுதி.

மாணவர்கள் கல்வி பயிலும் வழிகளில் சம வாய்ப்பு இல்லாத நிலையில் இந்த உள் ஒதுக்கீடு வரவேற்கத்தக்கது. தமிழக அரசு 453 இடங்களில் நீட் பயிற்சி அளித்து வருவதை பயிற்சி அளிக்கும் முறைகளை மேலும் மேம்படுத்த வேண்டும்.

நீதிபதி பொன்.கலையரசன் குழு அளித்துள்ள பரிந்துரையை ஏற்று உள் ஒதுக்கீடு வழங்க முன் வந்துள்ள தமிழக அரசைப் பாராட்டுகிறேன்".

இவ்வாறு எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x