Last Updated : 16 Jun, 2020 11:51 AM

 

Published : 16 Jun 2020 11:51 AM
Last Updated : 16 Jun 2020 11:51 AM

மும்பைத் தமிழர்கள் மீண்டும் திரும்பிச் செல்வது எப்படி?- தாராவி திரும்பிய கல்லூரி மாணவியின் அனுபவப் பகிர்வு

தாராவி | கோப்புப்படம்

மும்பையில் பொதுமுடக்கம் அமலுக்கு வந்ததும், அங்கிருந்த தமிழர்கள் அடித்துப் பிடித்துக்கொண்டு தமிழ்நாட்டில் உள்ள சொந்த ஊர்களுக்கு வந்து சேர்ந்தார்கள். இப்போது, ‘கரோனாவுடன் வாழப் பழகுங்கள்’ என்று சொல்லி அரசே அனைத்து நிறுவனங்களையும் திறக்கச் சொல்லிவிட்டது. விளைவாக, ஊருக்குச் சென்ற பணியாளர்களை எல்லாம் மீண்டும் பணியில் சேரச்சொல்லி அழைப்பு விடுத்திருக்கின்றன நிறுவனங்கள். ‘இந்த மாதத்திற்குள் பணிக்கு வரவில்லை என்றால், தங்களது வேலை பறிபோகலாம்’ என்று சில நிறுவனங்கள் சொல்லிவிட்டன.

கரோனா பீதியைவிட, வேலையிழப்பு பற்றிய பயம் காரணமாக தற்போது தமிழ்நாட்டில் வசிக்கும் மும்பைத் தமிழர்கள் மீண்டும் மகாராஷ்டிராவுக்கே திரும்பிச் செல்ல முயல்கிறார்கள். ஆனால், தமிழ்நாட்டில் இருந்து மகாராஷ்டிரா செல்லும் அத்தனை ரயில்களும், விமானங்களும் ரத்து செய்யப்பட்டுவிட்டன. பிறகெப்படி மும்பை செல்வது?

இதுகுறித்து சமீபத்தில் நெல்லை மாவட்டத்தில் இருந்து தனது தாய், தந்தையருடன் மும்பை சென்ற அம்பாசமுத்திரத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவி தனலட்சுமி ‘இந்து தமிழ் திசை’ இணையத்திடம் கூறுகையில், “தமிழ்நாட்டில் இருந்து நேரடியாக ரயில் இல்லை என்றதும், அண்டை மாநிலங்களில் இருந்து ரயில் இருக்கிறதா என்று இணையத்தில் தேடினேன். திருவனந்தபுரத்தில் இருந்து மும்பை குர்லாவுக்கு (லோக்மான்ய திலகர் நிலையம் LTT) தினமும் காலை 9.30 மணிக்கு நேத்ராவதி எக்ஸ்பிரஸ் ரயில் (எண் 06346) இயக்கப்படுவது தெரிந்தது. இ-பாஸ் எடுக்கக் கால அவகாசம் தேவை என்பதால், 4 நாட்கள் கழித்து மும்பை செல்வது போல ஒரு தேதியைத் தேர்வு செய்து அந்த ரயிலில் டிக்கெட் புக் செய்தேன். ஒரு நபருக்குப் படுக்கையுடன் கூடிய இரண்டாம் வகுப்பு கட்டணம் ரூ.710.

அதைத் தொடர்ந்து தமிழக அரசின் இணையத்தில் தமிழ்நாட்டில் இருந்து மும்பை செல்லவும், கேரள அரசின் இணையதளத்தில் தமிழ்நாடு எல்லையில் இருந்து திருவனந்தபுரம் செல்லவும் இ-பாஸுக்கு விண்ணப்பித்தேன். தமிழ்நாட்டிற்குள் என்றால் 24 மணி நேரத்திற்குள் இ-பாஸ் அப்ரூவல் ஆகியிருக்கிறதா இல்லையா என்று தெரிந்துவிடும். ஆனால், இந்த இரண்டு பாஸ்களும் அப்ரூவல் ஆகி வருவதற்கு 2 முதல் 3 நாட்கள் ஆகிவிட்டன.

இதைத் தொடர்ந்து நெல்லை மாவட்டத்தில் உள்ள எங்கள் சொந்த ஊரில் இருந்து தென்காசி, ஆரியங்காவு வழியாக நான், அம்மா, அப்பா மூன்று பேரும் வாடகைக் காரில் சென்றோம். வழியில் வழக்கம்போலப் பல ஊர்களில் தமிழ்நாடு போலீஸார் எங்களிடம் பாஸ் இருக்கிறதா என்று விசாரித்தார்கள். தமிழ்நாடு எல்லையான புளியரையிலும் பரிசோதித்தார்கள். அதன் பிறகு ஆரியங்காவு என்ற இடத்தில் உள்ள கேரள செக்போஸ்ட்டில் எங்களது வாகனம் சுமார் 1 மணி நேரம் நிறுத்தப்பட்டது.

அந்த சோதனைச் சாவடியில் சுமார் 200 லாரிகளும், இருபதுக்கும் அதிகமான கார்களும் நின்றன. எங்களது பாஸைப் பார்த்துவிட்டு அப்படியே விடவில்லை. அந்த பாஸ் உண்மையானது தானா என்று இணையம் மூலம் ஆய்வு செய்தார்கள். அப்போது எங்களது செல்போனுக்கு ஒரு ஓடிபி (OTP) வந்தது. அதைச் சொன்ன பிறகு, ‘நீங்கள் வந்த வாடகைக் காரில் கேரளா சென்றால், அந்த டிரைவர் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவார். எனவே, அந்த காரைத் திருப்பியனுப்பிவிட்டு கேரளக் காரில் திருவனந்தபுரம் செல்லுங்கள்’ என்றனர். இதைத் தொடர்ந்து கேரளக் காரில் சென்றோம்.

இடையில் இரண்டு இடங்களில் சோதனைச் சாவடிகளில் விசாரித்தார்கள். யார் பெயரில் இ-பாஸ் எடுக்கப்பட்டுள்ளதோ, அவர்தான் தன்னுடைய ஆதார் அட்டையுடன் போலீஸாரிடம் பேச வேண்டும் என்றனர். ஒரு வழியாக, காலை 9.30 ரயிலுக்கு முந்தைய நாள் நள்ளிரவிலேயே திருவனந்தபுரம் போய்விட்டோம். ஆனால், எங்களை ரயில் நிலையத்திற்குள் அனுமதிக்கவில்லை. காலையில்தான் உள்ளே விட்டார்கள்.

ரயிலில் கூட்டமே இல்லை. பல பெட்டிகள் காலியாக இருந்தன. நாங்கள் இருந்த பகுதியில் அனைத்து இருக்கைகளிலும் ஆட்கள் இருந்தார்கள். பாதுகாப்புக்காக முகக்கவசம், சானிடைசரைத் தொடர்ந்து பயன்படுத்தினோம். 32 மணி நேரப் பயணத்தில் நாங்கள் மும்பை குர்லாவை அடைந்தோம். நாங்கள் வாங்கியிருந்தது தமிழ்நாடு மற்றும் கேரள பாஸ் மட்டுமே. மகாராஷ்டிரக் காவல்துறை இணையதளத்தில் மும்பைக்குள் வருவதற்கான ஆப்ஷனே இல்லாததால், இ-பாஸ் எடுக்க முடியவில்லை. எனவே, எங்களைத் திருப்பி அனுப்பி விடுவார்களோ என்ற பயம் ஊரில் இருந்து கிளம்பியது முதல் இருந்தது. ஆனால், அவ்வாறு எதுவும் செய்யவில்லை.

குறைந்தபட்சம் தனிமைப்படுத்துவார்கள் என்று நினைத்தோம். அதுவும் செய்யவில்லை. காய்ச்சல் இருக்கிறதா என்று மட்டும் பரிசோதித்துவிட்டு கையில் ஒரு ரப்பர் ஸ்டாம்ப் குத்தி வீட்டிற்குப் போகச் சொல்லிவிட்டார்கள். வாடகைக் காரில் வீட்டுக்குப் போய்விட்டோம்.

போனதும் முதல் வேலையாக ஒரு மாதத்துக்குத் தேவையான உணவுப் பொருட்களை வாங்கி வைத்துவிட்டோம். அப்பாவையும் தினமும் ஆட்டோவிலேயே வேலைக்குச் செல்லும்படியும், பொதுப்போக்குவரத்தைப் பயன்படுத்த வேண்டாம் என்றும் சொல்லியிருக்கிறோம். தாராவியில் இப்போது ஜனநெருக்கடி குறைவாக இருக்கிறது. எனவே, கொஞ்சம் நிம்மதியாக இருக்கிறது” என்றார் தனலட்சுமி.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x