முழு ஊரடங்கு: 4 மாவட்டங்களில் அம்மா உணவகங்களில் இலவசமாக உணவு வழங்குக; தினகரன்

டிடிவி தினகரன்: கோப்புப்படம்
டிடிவி தினகரன்: கோப்புப்படம்
Updated on
1 min read

முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ள 4 மாவட்டங்களில் அம்மா உணவகங்களில் கட்டணம் ஏதுமின்றி உணவு வழங்க வேண்டும் என, அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.

கரோனா தொற்று அதிவேகமாக பரவிவரும் சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் வரும் 19-ம் தேதி முதல் 30-ம் தேதி வரை தமிழக அரசு நேற்று (ஜூன் 15) முழு ஊரடங்கை அறிவித்தது.

இந்நிலையில், முழு ஊரடங்கு செயல்படுத்தப்பட உள்ள 4 மாவட்டங்களில் அம்மா உணவகங்களில் இலவசமாக உணவு வழங்கப்பட வேண்டும் என, அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக, டிடிவி தினகரன் இன்று (ஜூன் 16) தன் ட்விட்டர் பக்கத்தில், "மீண்டும் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் செயல்படும் அம்மா உணவகங்களில் கட்டணம் ஏதுமின்றி உணவு வழங்க வேண்டும்.

ஊரடங்கு நீட்டிக்கப்பட்டிருக்கும் ஜூன் 30 ஆம் தேதி வரையிலும் அம்மா உணவகங்களில் இலவச உணவு வழங்குவதைத் தொடர்ந்தால்தான் வேலையிழப்பால் பாதிக்கப்பட்டிருக்கிற தொழிலாளர்கள் மற்றும் ஏழை எளியோர்கள் ஓரளவுக்காவது நிம்மதி பெருமூச்சு விட முடியும்.

எனவே, தமிழக அரசு காலம் தாழ்த்தாமல் இதற்கான அறிவிப்பை உடனடியாக வெளியிட வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்" என பதிவிட்டுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in