Published : 16 Jun 2020 09:46 AM
Last Updated : 16 Jun 2020 09:46 AM

நான்கு மாவட்டங்களில் முழு ஊரடங்கு: பொதுமக்கள் முழு ஒத்துழைப்போடு தமிழக அரசின் வியூகங்களை செயல்படுத்தினால் கரோனாவை வெல்லலாம்; வாசன்

ஜி.கே.வாசன்: கோப்புப்படம்

சென்னை

பொதுமக்கள் முழு ஒத்துழைப்போடு தமிழக அரசின் வியூகங்களையும் கட்டுப்பாடுகளை கோட்பாடுகளை மீறாமல் செயல்படுத்தினால் கரோனாவை வெல்லலாம் என, தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக, ஜி.கே.வாசன் இன்று (ஜூன் 16) வெளியிட்ட அறிக்கை:

"தமிழக அரசு இன்றைக்கு சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளுர் ஆகிய நான்கு மாவட்டங்களுக்கு ஆதாவது சென்னை காவல் எல்லைக்குப்பட்ட பகுதிகளில் 12 நாள்களுக்கு ஜுன் 19 முதல் ஜுன் 30 வரை முழு பொது முடக்கத்தை அறிவித்து இருக்கின்றது. இதை தமிழ் மாநில காங்கிரஸ் வரவேற்கிறது.

சென்னை காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் உள்ள அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் அமைப்புசாரா உறுப்பினர்களுக்கும் பிற நலவாரிய உறுப்பினர்களுக்கும் ரூ.1,000 நிவாரணாக வழங்கப்படுவது ஏழை, எளிய, நடுத்தர மக்களுக்கு இந்த சிரமமான சூழ்நிலையில் உண்மையிலேயே மிகவும் பயன் தரும்.

தமிழகத்தில் தொடர்ந்து கரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டு போனாலும் தமிழகத்தில் 37 வருவாய் மாவட்டங்களில் 27 மாவட்டங்களில் தொற்று எண்ணிக்கை 100-க்குக் குறைவானவர்களாக இன்று வரை கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. மீதமுள்ள 6 மாவட்டங்களிலே 100-லிருந்து 300-க்கு உள்ளாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

ஆனால், தமிழக அரசு தீவிர நடவடிக்கையை எடுத்த போதிலும் 4 மாவட்டங்களில் மட்டும் அதாவது சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளுர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் கரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே போகிறது. இதை எப்படியாவது கட்டுப்படுத்த வேண்டும் என்று தமிழக அரசு பல்வேறு சிறப்பான முயற்சிகளை எடுத்து வருகிறது. மருத்துவ குழுவின் ஆலோசனைகளையும் மத்திய அரசின் கோட்பாடுகளையும் முறையாக கடைபிடித்து வருகிறது.

அதிகரித்து வரும் தொற்று எண்ணிக்கை மற்றும் இறந்தவர்களின் எண்ணிக்கை கண்டு மக்கள் அச்சத்தில் இருக்கின்றனர். இப்படிப்பட்ட சூழலில் மக்கள் மத்தியில் இருக்கின்ற அச்ச உணர்வை போக்கவும் கரோனா தொற்றை குறைப்பதற்கும் இந்த 4 மாவட்டங்களிலும் தமிழக அரசு எடுக்கும் இந்த சரியான முறையான கட்டுப்பாடுகளும் கோட்பாடுகளும் வியூகங்களும் வெற்றிபெற வேண்டுமென்றால் பொதுமக்கள் முழுமையான ஒத்துழைப்போடு அரசின் வழிகாட்டுதலையும் கட்டுப்பாடுகளையும் கோட்பாடுகளையும் மீறாமல் செயல்படுத்தினால் கரோனாவை வெல்லலாம். அனைவரும் ஒத்துழைப்போம், கரோனாவை வெல்வோம் என்று தமிழ் மாநில காங்கிரஸ் சார்பாக கேட்டுக்கொள்கிறேன்"

இவ்வாறு ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x