

முன்னாள் பேராசிரியரைத் தாக்கி கொலை செய்ய முயன்றதாக துணைவேந்தர், பதிவாளர் மீது கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
மதுரை காமராஜர் பல்கலைக்கழக நிர்வாகத்தில் குளறுபடி நடப்பதாகக் கூறி சில பேராசிரியர்கள், முன்னாள் பேராசிரியர்கள், மாணவ, மாணவிகள் உள்ளிட்டோர் அண்மைக்காலமாக பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களை ஒருங்கிணைத்து ஏற்படுத்தப்பட்ட காமராஜர் பல்கலைக்கழக பாதுகாப்புக் குழுவின் அமைப்பாளராக நாகமலைப்புதுக்கோட்டையைச் சேர்ந்த முன்னாள் பேராசிரியர் அ.சீனிவாசன் செயல்பட்டு வருகிறார்.
இந்நிலையில் வெள்ளிக்கிழமை காலை வீட்டருகே நடைபயிற்சி மேற்கொண்ட அ.சீனிவாசனை, அங்கு இருசக்கர வாகனத்தில் வந்த 2 நபர்கள் உருட்டுக்கட்டையால் தாக்கினர். இதில் சீனிவாசனின் கை எலும்பு முறிந்ததால் தனியார் மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதற்கிடையே, இந்த சம்பவம் தொடர்பாக அ.சீனிவாசன் நாகமலைப்புதுக்கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதில், பல்கலைக்கழகத் துணைவேந்தர், பதிவாளர் ஆகியோர் தூண்டுதலின்பேரில் இந்த தாக்குதல் நடந்துள்ளதாகத் தெரிவித்திருந்தார்.
இதையடுத்து துணைவேந்தர் கல்யாணி மதிவாணன், பதிவாளர் (பொ) முத்துமாணிக்கம், இளைஞர் நலத்துறைத் தலைவர் செல்லத்துரை, மக்கள் தொடர்பு அதிகாரி (பொ) அறிவழகன், ஓய்வுபெற்ற பண்டகசாலை ஊழியர் செல்வராஜ் மற்றும் அடையாளம் தெரியாத 2 நபர்கள் மீது நாகமலைப்புதுக்கோட்டை போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இதுபற்றி போலீஸார் கூறுகையில், ‘சீனிவாசன் அளித்த புகாரின்பேரில் துணைவேந்தர் உள்ளிட்டவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. புகாரின் உண்மைத் தன்மை குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இதற்கிடையே, சீனிவாசன் சிலரிடம் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பணம் பெற்று ஏமாற்றிவிட்டதாகவும், அதனால் பாதிக்கப்பட்டவர்கள் அவரைத் தாக்கியிருக்கலாம் எனவும் சந்தேகப்படுகிறோம். அதுபற்றியும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. எது உண்மை என ஓரிரு நாளில் தெரிந்துவிடும்’ என்றனர்.