

கரோனா பாதிப்பு குறித்து அரசு வெளிப்படைத் தன்மையுடன் செயல்பட்டு, நோய் பாதிப்புக்களின் உண்மை நிலையை அறிவிக்க வேண்டும் என மேற்கு மண்டல எம்பி-க்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
தமிழகத்தின் மேற்கு மண்டல எம்பி-க்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் ஈரோட்டில் நேற்று நடந்தது. கூட்டத்தில், எம்பி-க்கள் கணேசமூர்த்தி (ஈரோடு), கே.சுப்பராயன் (திருப்பூர்), ஜோதிமணி (கரூர்), சின்ராஜ் (நாமக்கல்), பி.ஆர்.நடராஜன் (கோவை), எஸ்.ஆர்.பார்த்திபன் (சேலம்), வேலுச்சாமி (திண்டுக்கல்) ஆகியோர் பங்கேற்றனர்.
கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து எம்பி-க்கள் கூறியதாவது:
எம்பி-க்களின் தொகுதி வளர்ச்சி நிதியை நிறுத்தி வைக்கும் மத்திய அரசின் முடிவை திரும்பப் பெற வேண்டும். சேலம்- சென்னை எட்டு வழிச்சாலைத் திட்டத்தைக் கைவிட வேண்டும். மாநில அரசுகளின் உரிமைகளை பறித்து வருவதை மத்திய அரசு கைவிட வேண்டும். விவசாய விளைநிலங்கள் வழியாக உயர்மின்னழுத்த கோபுரங்கள் கொண்டு செல்வதற்கு தடை விதிக்க வேண்டும்.
கரோனா பாதிப்பு குறித்து தமிழக அரசு வெளிப்படைத் தன்மையுடன் செயல்பட்டு நோய் பாதிப்புக்களின் உண்மை நிலையை அறிவித்திட வேண்டும். கரோனா தடுப்பு நடவடிக்கையை தமிழகம் முழுவதும் தீவிரப்படுத்திட வேண்டும். கரோனாவால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள தமிழக மேற்கு மண்டலப் பகுதிக்கு, சிறு,குறு தொழில்களின் மேம்பாட்டுக்காக தனி நிதி ஒதுக்கித் தர வேண்டும்.
ஊரடங்கு காலத்தில் மக்கள் பெற்ற கடனுக்கான 6 மாத வட்டித் தொகையை ரத்து செய்ய வேண்டும். மருத்துவ மாணவர் சேர்க்கையில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கான இடங்களை ஒதுக்கீடு செய்து சமூக நீதியை நிலை நாட்ட வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.