

கழிவறை பராமரிப்பு, மாதாந்திர வரவு,செலவு, கரோனா வைரஸ் கிருமிநாசினி தெளிப்புப் பணியில் முறைகேடு நடந்ததாக, பெருமாநல்லூர் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் சிவகாமி, பத்மாவதி, காசிராஜன், கவிதா மற்றும் அய்யாசாமி ஆகியோர் திருப்பூர் ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர். அதில் கூறியிருப்பதாவது:
பெருமாநல்லூர் ஊராட்சி 3-வது வார்டில் சந்தைப்பேட்டை கழிவறை ஏற்கெனவே உள்ளது. பழுதான காரணத்தால், அதனை பராமரிக்க ரூ. 3.67 லட்சம் செலவுக் கணக்கு தீர்மானத்தில் வைக்கப்பட்டது. இதில் முறைகேடு நடந்துள்ளது. கரோனா காலத்தில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டதை, கட்சி சார்பாக தெளிக்கப்பட்டதாக விளம்பரம் செய்துள்ளனர். தேசிய ஊரக வேலை உறுதி அளிப்பு திட்டத்தில் பணிக்கு வராத சிலர், பணிக்கு வந்ததாகக்கூறி நிதியில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளன. இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு புகாரில் தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் உறுதி அளித்ததால், அனைவரும் கலைந்தனர்.
இதுகுறித்து பெருமாநல்லூர் ஊராட்சி மன்றத் தலைவர் சாந்தாமணி கூறியதாவது: வட்டார வளர்ச்சி அலுவலரின் அனுமதி பெற்றுத்தான், செலவு செய்து வருகிறோம். கழிவறை பராமரிப்பு ரூ. 1 லட்சத்து 90000-ம், சுற்றுச்சுவர் கட்டுவதற்கும் தனித்தனியாக செலவு செய்துள்ளோம். 3 மாத காலமாக கரோனா வைரஸ் தடுப்புப்பணியில்தான் ஈடுபட்டுள்ளோம், என்றார்.