Published : 16 Jun 2020 07:53 AM
Last Updated : 16 Jun 2020 07:53 AM

பெண் குழந்தை மீட்பு: இளைஞர்கள் கைது

கோப்புப்படம்

திருப்பூர்

திருப்பூரிலிருந்து ஓராண்டுக்கு முன் கடத்திச் செல்லப்பட்ட பெண் குழந்தையை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்த போலீஸார், சம்பவம் தொடர்பாக பட்டதாரி இளைஞர்கள் இருவரைக் கைது செய்தனர்.

திருப்பூர் போயம்பாளையம் வடிவேல் நகரைச் சேர்ந்தவர் லிங்கராஜ் மனைவி நிஷாந்தி. இவர் அனுப்பர்பாளையம் காவல் நிலையத்தில் கடந்த 9-ம் தேதி புகார் ஒன்றை அளித்தார். புகாரில், கடந்த 2019-ம் ஆண்டு ஏப்ரல் 24-ம் தேதி தனது ஒன்றரை வயது குழந்தையான பவநாச்சியார் என்பவரை, மதுரையில் வசிக்கும் தனது தந்தை செல்வராஜ், சித்தி ராதா, சகோதரர் ராஜ்குமார் (33) மற்றும் அவரது நண்பர் கார்த்திகேயன் (எ) அசோக் (35) ஆகிய நான்கு பேரும் அழைத்து சென்றனர்.

அதற்கு பிறகு பலமுறை நேரில் சென்று கேட்டும் தரமறுத்து விட்டனர். கடந்த 9-ம் தேதி அலைபேசியில் அழைத்து கேட்டபோது கொலை மிரட்டல் விடுத்தனர். அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து, குழந்தையை மீட்டுத் தர வேண்டும், என தெரிவித்திருந்தார்.

புகாரின் பேரில் விசாரணை நடத்திய ஆய்வாளர் ராஜன் தலைமையிலான போலீஸார், முதலில் செல்வராஜை கைது செய்தனர். அவரிடம் விசாரித்தபோது, தன்னிடமிருந்த குழந்தையை ராஜ்குமார் மற்றும் கார்த்திகேயன் ஆகியோர் கடத்திச் சென்றதாக தெரிவித்துள்ளார்.

இதையடுத்து மதுரை ஆத்துக்குளம் பகுதியில் வைத்து இருவரையும் கைது செய்த போலீஸார், குழந்தையை மீட்டு நேற்று முன்தினம் பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.

இதுகுறித்து போலீஸார் கூறும்போது, ‘கைது செய்யப்பட்ட ராஜ்குமார், மதுரை அமெரிக்கன் கல்லூரியில் எம்.பில். படித்து வருகிறார். ராமநாதபுரத்தை சேர்ந்த கார்த்திகேயன், எம்.பி.ஏ. படித்தவர்.

இவருக்கு இருமுறை திருமணம் செய்தும் மனைவிகள் பிரிந்து சென்றுவிட்டனர். அதற்கு பிறகு அறிமுகமான ராஜ்குமார் உடன் சேர்ந்து வாழ்ந்து வந்துள்ளார். தனது தாயாரின் சொத்துகளை குழந்தை மூலமாக பெறவே, ராஜ்குமார் உதவியுடன் சிறுமியை கடத்தி சொந்த குழந்தை எனக் கூறி கார்த்திகேயன் வளர்த்து வந்துள்ளார்’ என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x