Published : 16 Jun 2020 07:08 AM
Last Updated : 16 Jun 2020 07:08 AM

கரோனா ஊரடங்கால் மகாராஷ்டிராவில் தவித்த 500 தமிழக தொழிலாளர்கள் ஊர் திரும்பினர்: ஐஏஎஸ் பயிற்சி பெறும் இளைஞர்கள் உதவிக்கரம்

கி.ஜெயப்பிரகாஷ்

கரோனா ஊரடங்கால் மகாராஷ்டிராவில் தவித்த 500 தமிழக தொழிலாளர்கள், சொந்த ஊர்களுக்குத் திரும்ப சென்னையில் ஐஏஎஸ் பணிக்கு பயிற்சி பெற்றுவரும் இளைஞர்கள் உதவிக்கரம் நீட்டியுள்ளனர்.

கரோனா ஊரடங்கு காரணமாக பல்வேறு மாநிலங்களில் வெளி மாநிலத் தொழிலாளர்கள் சிக்கி உள்ளனர். தங்களின் வாழ்வாதாரம் இழந்து ஊர் திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர். அவ்வாறு மகாராஷ்டிராவில் தவித்த 500 தமிழக தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு திரும்ப சென்னையில் ஐஏஎஸ் பணிக்கு பயிற்சி எடுத்துவரும் இளைஞர்கள் உதவிக்கரம் நீட்டியுள்ளனர். இவர்கள் நடத்திவரும் ‘ஒளி’ என்ற அமைப்பு மூலம் இதுபோன்ற பல்வேறு சமூக நலப் பணிகளை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.

இதுதொடர்பாக ஐஏஎஸ் பயிற்சி இளைஞரும், ‘ஒளி’ அமைப்பின் ஒருங்கிணைப்பாளருமான எஸ்.நவநீதன் கூறியதாவது:

நண்பர்களோடு இணைந்து நடத்திவரும் ‘ஒளி’ என்ற அமைப்புமூலம் ஊரடங்கால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவுப் பொருட்கள், அங்கன்வாடி பணியாளர்களுக்கு முகக் கவசங்கள் வழங்குவது போன்ற பணிகளை மேற்கொண்டு வருகிறோம். இதற்கிடையே, மகாராஷ்டிராவில் ஏராளமான தமிழகத் தொழிலாளர்கள் ஊரடங்கால் சொந்த ஊர்களுக்குத் திரும்ப முடியாமல் அவதிப்படுவது அங்குள்ள நண்பர்கள் மூலம் எங்களுக்குத் தெரிய வந்தது.

இதையடுத்து, சென்னையில் ஐஏஎஸ் பயிற்சியில் ஈடுபட்டு, மகாராஷ்டிராவில் அரசு உயர் அதிகாரிகளாக உள்ள சிலரைத் தொடர்புகொண்டு அங்குள்ள தமிழக தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு திரும்ப நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினோம். அதன்பிறகு, சிறப்புரயில்கள் மற்றும் 5 பேருந்துகளில் சொந்த ஊர்களுக்கு அனுப்பி உள்ளோம். இதுவரை, மகாராஷ்டிராவில் இருந்து கடலூர், திருவண்ணாமலை, திருநெல்வேலி, விழுப்புரம், தென்காசி, ஈரோடு, சேலம் ஆகியமாவட்டங்களுக்கு 500 பேர் திரும்பியுள்ளனர். இதற்கு ரூ.1.50 லட்சம் செலவானது. இத் தொகையை எங்களது நண்பர்கள் மூலம் திரட்டினோம். இவ்வாறு அவர் கூறினார்.

தொழிலாளர்கள் நன்றி

சொந்த ஊர்களுக்கு திரும்பியுள்ள தமிழக தொழிலாளர்கள் சிலர் கூறும்போது, ‘‘ஊரடங்கால் மகாராஷ்டிராவில் முடங்கி இருந்தோம். சொந்த ஊருக்கு செல்ல யாரை தொடர்பு கொள்வது என்பதுகூட எங்களுக்குத் தெரியவில்லை. இதையடுத்து, ‘ஒளி’ அமைப்புஇளைஞர்களின் முயற்சியால் நாங்கள் தமிழகம் திரும்பியுள்ளோம். அவர்களுக்கு எங்களது நன்றி’’ என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x