

சோழவரம் அருகே சூதாட்ட கும்பலை பிடிக்க முயன்ற போலீஸார் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதுதொடர்பாக ஊராட்சி தலைவர் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் ராஜூ, காவலர் நீலமேகம் ஆகியோர் நேற்று முன்தினம் மாலை அருமந்தை பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அருமந்தை குடியிருப்பு அருகே உள்ள மயானம் பகுதியில் ஒரு கும்பல் சூதாட்டத்தில் ஈடுபட்டிருந்தது. அங்கு கள்ளத்தனமாக மதுவிற்பனை நடந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து, அந்த கும்பலை போலீஸார் சுற்றிவளைத்து பிடிக்க முயன்றனர். அப்போது போலீஸாருக்கும், சூதாட்ட கும்பலுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றிய நிலையில், சூதாட்ட கும்பலைச் சேர்ந்த ஒருவர், காவலர் நீலமேகத்தை கீழே தள்ளிவிட்டுள்ளார்.
பின்னர், அங்கிருந்த ஒருவர், அதிமுக வைச் சேர்ந்த அருமந்தை ஊராட்சி தலைவர் விக்ரமன் (28) என்பவருக்கு செல்போன் மூலம் தகவல் அளித்துள்ளார். இதையடுத்து, ஊராட்சித் தலைவர் விக்ரமன் அங்கு விரைந்து வந்து, சூதாட்ட கும்பலுக்கு ஆதரவாக போலீஸாரிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார்.
தகராறு முற்றியதால் விக்ரமன் உள்ளிட்ட 10 பேரும் சேர்ந்து போலீஸாரை பணி செய்யவிடாமல் கத்தி, இரும்பு ராடு, உருட்டுக்கட்டை ஆகியவற்றால் கடுமையாக தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் காவலர் நீலமேகத்தின் வலது கையில் எலும்பு முறிவு ஏற்பட்டது. அவர், சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் மேல்சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த தாக்குதலில் ஈடுபட்ட 10 பேர் மீதும் கொலை முயற்சி உள்ளிட்ட 7 பிரிவுகளின்கீழ் வழக்கு பதிவு செய்த சோழவரம் போலீஸார், ஊராட்சி தலைவர் விக்ரமன், அருமந்தையைச் சேர்ந்த தமிழரசன், இளவரசன் ஆகிய 3 பேரை நேற்று கைது செய்தனர். அவர்கள் 3 பேரும் பொன்னேரி ஜே.எம்- 2 நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, பொன்னேரி கிளை சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். தப்பியோடிய மேலும் 7 பேரை போலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
இந்த சம்பவம் காரணமாக அருமந்தை, பெருங்காவூர் உள்ளிட்ட பகுதிகளில் பதற்றமான சூழல் நிலவுகிறது. அதனால், போலீஸார் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.