முகக்கவசம், கையுறைகள் வழங்க வலியுறுத்தி கோவில்பட்டியில் போக்குவரத்துக் கழக ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

கோவில்பட்டி அரசு போக்குவரத்து பணிமனை முன்பு தொழிற்சங்கங்கள் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.
கோவில்பட்டி அரசு போக்குவரத்து பணிமனை முன்பு தொழிற்சங்கங்கள் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.
Updated on
1 min read

அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்களுக்கு முகக்கவசம், கையுறைகள் வழங்க வலியுறுத்தி கோவில்பட்டியில் தொழிற்சங்கங்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

பேருந்து இயக்கத்துக்கு சுழற்சி முறையில் குழுக்களாக பிரிக்கப்பட்டு பணி ஒதுக்கீடு முறையாக பின்பற்ற வேண்டும். பேருந்து நிறுத்தங்களில் பணியாற்றும் ஓட்டுநர், நடத்துநர்களுக்கு பணப்பலன்கள் வழங்க வேண்டும்.

ஓட்டுநர், நடத்துநர், தொழில்நுட்ப மற்றும் அலுவலக பணியாளர் உள்ளிட்ட அனைவருக்கும் ஒருமுறை மட்டுமே முகக்கவசம் மற்றும் கையுறை வழங்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு மாற்று முகக்கவசம் மற்றும் கையுறைகள் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அரசு உத்தரவுப்படி 50 சதவீத ஊழியர்களை சுழற்சி முறையில் பணியாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். அலுவலக பணியாளர்கள் பணிபுரியும் இடங்களில் சமூக இடைவெளி பின்பற்றுவதை உறுதிப்படுத்த வேண்டும்.

போக்குவரத்து கழக பணியில் ஈடுபடும்போது கரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டால் அதற்கான சிகிச்சை, சிகிச்சை காலத்துக்கான சிறப்பு விடுப்பு அளிக்க வேண்டும். சிகிச்சை பலனின்றி உயிரிழக்கும் தொழிலாளர்களுக்கு அரசு அறிவித்துள்ள சிறப்பு காப்பீட்டு திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோவில்பட்டி இளையரசனேந்தல் சாலையில் அரசு போக்குவரத்து கழக பணிமனை முன்பு தொழிற்சங்கங்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஆர்ப்பாட்டத்தில், தொ.மு.ச. தலைவர் வெங்கடசாமி, செயலாளர் மாரியப்பன், சி.ஐ.டி.யு. தலைவர் கருப்பசாமி, செயலாளர் மோகன், ஏ.ஐ.டி.யு.சி. தலைவர் சிவமுருகன், செயலாளர் காளிராஜ், ஐ.என்.டி.யு.சி. தலைவர் மகேந்திரன், செயலாளர் மாணிக்கவாசகம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் முழங்கினர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in