

புதுச்சேரி பாஜக மாநிலச் செயலாளருக்குக் கரோனா தொற்று உறுதி ஆனதால் கட்சித் தலைமை அலுவலகம் மூடப்பட்டுள்ளது. அவருடன் தொடர்பில் இருந்த கட்சி நிர்வாகிகளைக் கண்டறியும் பணி நடக்கிறது. அவரது தொழிற்சாலையில் உள்ள 5 பேருக்குத் தொற்று உறுதியாகியுள்ளது. மேலும் 35 பேர் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர்.
புதுச்சேரி எல்லப்பிளைச்சாவடி ரத்தினம் நகரைச் சேர்ந்த பாஜக மாநிலச் செயலருக்கு கரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. இதையடுத்து அவர், கதிர்காமம் அரசு மருத்துவக் கல்லூரியில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டுள்ளார். இதன் காரணமாக இந்திராகாந்தி சிக்னல் அருகே உள்ள பாஜக தலைமை அலுவலகம் தற்காலிகமாக மூடப்பட்டது. பாஜக அலுவலகத்தில் உள்ள கருத்தரங்கு அறைகளைத் திறக்கக்கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இத்தகவலை சுகாதாரத்துறை அதிகாரிகள் உறுதி செய்தனர். மேலும், கட்சி அலுவலகத்தில் தன்னிடம் தொடர்பில் இருந்த 8 நிர்வாகிகள் உள்ளிட்டோரின் பெயர் விவரத்தை சுகாதாரத்துறை அதிகாரிகளிடம், அவர் கொடுத்துள்ளதாக சுகாதாரத் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அவர்களையும் பரிசோதிக்க சுகாதாரத்துறை முடிவு எடுத்துள்ளது.
பரவியது எப்படி?
கரோனா தொற்று உள்ள பாஜக மாநிலச் செயலர் புதுச்சேரி மேட்டுப்பாளையம் தொழிற்பேட்டையில் முகக்கவசம் தயாரிக்கும் தொழிற்சாலை நடத்தி வருகிறார். இவர் சென்னை சென்று வந்தபோது நோய்த்தொற்று ஏற்பட்டிருக்க வாய்ப்புள்ளது. அவருக்கு ஏற்பட்டதைப் போல தொழிற்சாலையில் பணியாற்றிய ஐந்து ஊழியர்களுக்கும் நோய்த் தொற்று ஏற்பட்டு அரசு மருத்துவமனையில் ஏற்கெனவே அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், தொழிற்சாலையில் பணியாற்றும் 35-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் தனிமைப்படுத்தப்பட்டு சோதனைக்கு உட்படுத்தப்பட்டு உள்ளனர் என்றும் சுகாதாரத்துறை தரப்பில் குறிப்பிடுகின்றனர்.