Published : 15 Jun 2020 08:51 PM
Last Updated : 15 Jun 2020 08:51 PM

சென்னையில் தினந்தோறும் 680 மருத்துவ முகாம்கள்: பொதுமக்கள் பயனடையுமாறு சென்னை மாநகராட்சி வேண்டுகோள்

பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கரோனா வைரஸ் தொற்று தடுப்பு நடவடிக்கையாக நாள்தோறும் 680 மருத்துவ முகாம்கள் நடத்தப்பட உள்ளன. பொதுமக்கள் தாமாக முன் வந்து பயனடைய வேண்டும் என மாநகராட்சி ஆணையர் பிரகாஷ், தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

“பெருநகர சென்னை மாநகராட்சி மூலம் கரோனா வைரஸ் தொற்று (COVID-19) தடுப்புப் பணிக்காக 15.06.2020 முதல் சென்னையில் உள்ள 200 கோட்டங்களிலும், வார்டுக்கு இரண்டு மருத்துவ முகாம்கள் அந்தந்த வார்டுக்கு உட்பட்ட பகுதியில் நாள்தோறும் வெவ்வேறு இடங்களில் 400 மருத்துவ முகாம்கள், மாநகர ஆரம்ப சுகாதார மைய (Urban Primary Health Centre) மருத்துவர்கள் மூலம் 140 மருத்துவ முகாம்கள் என மொத்தம் 540 மருத்துவ முகாம்கள் வார்டு நல அலுவலர்கள் (Divisional Health Officers) தலைமையில் நடத்தப்பட உள்ளது. இம்முகாம்களில் மருத்துவம் சார்ந்த பணியாளர்கள் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.

மேலும், 140 நகர ஆரம்ப சுகாதார மையங்களிலும் காலை 8 மணி முதல் 11.30 மணி வரை புற நோயாளிகள் பிரிவிற்கு வருகின்றவர்களுக்கு, சிறு சிறு உடல் உபாதைகளுக்கான சிகிச்சை, அனைத்து வகை காய்ச்சலுக்கான சிகிச்சை, கர்ப்பகாலப் பரிசோதனை, கர்ப்பிணித் தாய்மார்களுக்கு தடுப்பூசி போடுதல், HIV பரிசோதனை, ரத்த அழுத்தம் மற்றும் எடை பார்த்தல். ஆன்லைன் மூலம் கர்ப்பம் பதிவு செய்தல், RCH ID எண் வழங்குதல், கர்ப்பகால முன் சிகிச்சை/ பின் சிகிச்சை அளித்தல், தொற்று மற்றும் தொற்றா நோய்க்கான (நீரிழிவு, ரத்த அழுத்தம் மற்றும் மார்பகப் புற்றுநோய்) சிகிச்சை அளித்தல், ரத்தக் கொதிப்பு, சர்க்கரை வியாதி கண்டறிதல், தொடர் சிகிச்சை மற்றும் உரிய ஆலோசனை அளித்தல் மற்றும் ஆய்வுக்கூடப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு உரிய மருந்து மாத்திரைகள் வழங்கப்பட்டு வருகின்றன.

மேலே குறிப்பிட்டுள்ள மருத்துவ முகாம்களுக்கு வருபவர்களையும், புற நோயாளிகள் பிரிவிற்கு சிகிச்சைக்கு வருபவர்களையும் பரிசோதித்து, அவர்களுக்குக் கரோனா வைரஸ் தொற்றுக்கான அறிகுறி இருப்பது கண்டறியப்பட்டால் உடனடியாக அருகில் உள்ள கரோனா வைரஸ் தொற்றுப் பரிசோதனை மையத்திற்கு பரிந்துரைக்கப்படுவர்.

அறிகுறி இல்லை என்றால், அவர்களுக்குத் தேவையான சிகிச்சை அளித்து, மருந்து மாத்திரைகள் வழங்கப்படும். அதேபோல் இந்த வைரஸ் தொற்றிலிருந்து பொதுமக்கள் தங்களை எவ்வாறு தற்காத்துக் கொள்வது என்ற விழிப்புணர்வும் ஏற்படுத்தப்படும்.

பெருநகர சென்னை மாநகராட்சியில் வார்டுக்கு 2 மருத்துவ முகாம்கள் என நாள்தோறும் 200 வார்டுகளில் 400 இடங்களிலும் மற்றும் 140 நகர ஆரம்ப சுகாதார மையங்களுக்கு உட்பட்ட கரோனா வைரஸ் தொற்று பாதிப்பு அதிகமுள்ள பகுதிகளுக்கு மருத்துவ அலுவலர் குழுவோடு சென்று மருத்துவ முகாம்கள் நடத்தவும் மற்றும் 140 நகர ஆரம்ப சுகாதார மையங்களில் புற நோயாளிகளுக்கு சிகிச்சை என 680 மருத்துவ முகாம்கள் நடைபெறும்.

இம்மருத்துவ முகாம்களை பொதுமக்கள் முழுமையாகப் பயன்படுத்திக் கொண்டு பயனடையுமாறு பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்”.

இவ்வாறு சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x