

கன்னியாகுமரி மாவட்டத்திற்கு போலி இ பாஸ் மூலம் வருவோர் அதிகரித்து வருவதால் சோதனை சாவடிகளில் தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
களியக்காவிளை, ஆரல்வாய்மொழி, அஞ்சுகிராமம், மற்றும் பிற சோதனை சாவடிகளில் 24 மணி நேரமும் போலீஸார், மற்றும் சுகாதாரத்தறையினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
சென்னையில் இருந்து குமரி மாவட்டத்திற்கு வருவதற்கு இ பாஸ் பெரும்பாலானோருக்கு கிடைக்காததை பயன்படுத்தி பல டிராவல்ஸ் நிறுவனத்தினர் பொதுமக்களிடம் அதிக கட்டணத்தை வசூல் செய்து போலி இ பாஸ் தயார் செய்து அழைத்து வருவது கண்டறியப்பட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து ஏற்கெனவே 5 பயணிகளுடன் சென்னையில் இருந்து போலி இ பாஸ் மூலம் காரில் வந்த ஜெயபிரகாஷ் என்பவர் கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில் அஞ்சுகிராமம் சோதனை சாவடியில் எஸ்.ஐ. சத்தியநேசன் தலைமையில் போலீஸார் வாசன சோதனை செய்தபோது சென்னையில் இருந்து வந்த காரில் 6 பேர் இருந்தனர்.
அவர்களது இ பாசை சோதனை செய்தபோது போலியானது என்பது தெரியவந்தது. இதனால் செங்கல்பட்டை சேர்ந்த கார் ஓட்டுனர் விக்னேஷ்(28) என்பவர் கைது செய்யப்பட்டார்.
அவர் மீது மோசடி உட்பட 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மேலும் காரில் இருந்த 6 பேரும் கரோனா பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர்.
போலி இ பாஸ் மூலம் குமரி மாவட்டத்திற்கு பலர் நுழைவதை தொடர்ந்து குறுக்கு சாலைகளிலும் சோதனை பலப்படுத்தப்பட்டுள்ளது.