தூத்துக்குடிக்கு ஒரு மாதத்தில் வெளிமாவட்டங்களில் இருந்து 14000 பேர் வருகை

தூத்துக்குடிக்கு ஒரு மாதத்தில் வெளிமாவட்டங்களில் இருந்து 14000 பேர் வருகை
Updated on
1 min read

தூத்துக்குடி மாவட்டத்துக்கு கடந்த ஒரு மாதத்தில் வெளிமாவட்டங்களில் இருந்து 14 ஆயிரம் பேர் வந்துள்ளதாக மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்தார்.

தூத்துக்குடியில் இன்று செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: தூத்துக்குடி மாவட்டத்தில் இதுவரை 16,536 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

தினமும் பரிசோதனைக்காக சராசரியாக 250 முதல் 300 மாதிரிகள் எடுக்கப்படுகின்றன. நேற்று முன்தினம் வரை தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த 398 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதில் 185 பேர் வெளி மாநிலங்களில் இருந்து வந்தவர்கள். மேலும், 84 பேர் சென்னையில் இருந்து வந்தவர்கள். 3 பேர் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள். மீதமுள்ள தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்தவர்களும் அவர்களுடன் தொடர்பு கொண்டவர்கள் தான்.

கடந்த மே 4-ம் தேதி முதல் வெளிமாநிலங்களில் இருந்து 3,568 பேர் நமது மாவட்டத்துக்கு வந்துள்ளனர். இதில் 2,665 பேர் மகாராஷ்டிரா மாநிலத்தில் இருந்து வந்துள்ளனர். அதேபோல் சென்னை மற்றும் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் இருந்து மட்டும் 8,396 பேர் வந்துள்ளனர்.

இதர மாவட்டங்களில் இருந்து சுமார் 12 ஆயிரம் பேர் வந்துள்ளனர். வெளிமாவட்டங்களில் இருந்து மட்டும் சுமார் 14 ஆயிரம் பேர் வந்துள்ளனர். இவர்கள் சில மாவட்டங்களில் இருந்து வந்தவர்களை தவிர மற்ற அனைவருக்கும் கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

மாவட்டத்தில் கரோனா தொற்றை தடுக்க போர்க்கால அடிப்படையில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. போலி இ-பாஸ் மூலம் வருவோரனை கண்டுபிடிக்க அனைத்து சோதனைச் சாவடிகளிலும் கியூஆர் கோர்டு ஸ்கேனர் வசதி செய்யப்பட்டுள்ளது.

மேலும், சோதனை சாவடிகளில் தப்பி செல்வோரை கண்டறிய கிராம அளவில் கண்காணிப்பு மற்றும் விழிப்புணர்வு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன என்றார் ஆட்சியர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in