

முகக்கவசத்தைக் கட்டாயம் அணியுங்கள் என்று அமைச்சர் காமராஜ் வேண்டுகோள் விடுத்தார். முகக்கவசம் அணிவது கடுமையாக்கப்படும் என்று சுகாதாரத்துறைச் செயலர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
தமிழ்நாட்டில் தற்போது பெருநகர் சென்னையில் பல பகுதிகளில் கரோனா தொற்று நோய் பரவலாகி வருவதைக் கட்டுப்படுத்த முதல்வர் பழனிசாமி ஆலோசனைப்படி தமிழ்நாடு அரசு கரோனா நோய்த்தொற்று தடுப்புப் பணிகளை மேற்கொண்டு பல்வேறு சிறப்புத் திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது.
அதன் தொடர்ச்சியாக, அண்ணா நகர், தேனாம்பேட்டை மற்றும் கோடம்பாக்கம் ஆகிய மண்டலங்களில் (மண்டலம் எண். 8, 9 மற்றும் 10) எடுக்கப்பட்டு வரும் மற்றும் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து, அமைச்சர் காமராஜ் மண்டலம் தொடர்புடைய கண்காணிப்பு அலுவலர்களுடன் ஆய்வுக் கூட்டம் நடத்தினார்.
இந்தக் கூட்டத்தில் சுகாதாரத்துறைச் செயலர் ராதாகிருஷ்ணன், கரோனா வைரஸ் தொற்று தடுப்பு சிறப்பு ஒருங்கிணைப்பாளர் பங்கஜ் குமார் பன்சால், மாநகராட்சி ஆணையர் பிரகாஷ், மற்றும் தொடர்புடைய மண்டல அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
இதில் அமைச்சர் காமராஜ் பேசும்போது, ''கரோனா நோய் அதிகமாகப் பரவியுள்ள கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளிலிருந்தோ தனிமைப்படுத்தப்பட்ட வீடுகளிலிருந்தோ வெளியில் வருவது கண்டறியப்பட்டால் அத்தகைய நபர்கள் தனியாக மையங்களில் தங்கவைக்கப்படுவதுடன் அவர்கள் மீது உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். கரோனா நோய் ஏற்படுவதைத் தவிர்க்கும் பொருட்டு பொது மக்கள் யாரும் தேவையில்லாமல் வெளியில் வருவதைத் தவிர்க்கவும். அவ்வாறு வெளியில் வரும்போது தவறாமல் முகக்கவசம் அணிந்து வரவேண்டும்'' எனத் தெரிவித்தார்.
முகக்கவசம் அணியாமல் வெளியில் வரும் பொதுமக்களிடம் உரிய அறிவுரைகள் வழங்கி முகக்கவசம் அணிவதன் அவசியத்தை உணரும்படி அறிவுறுத்துமாறு அதிகாரிகளிடம் அமைச்சர் காமராஜ் கேட்டுக்கொண்டார்.
மேலும் அவர் கூறுகையில், ''கரோனா தொற்றால் ஏற்படும் மரணங்களைத் தடுப்பதற்காக மண்டல நிலையிலும் மற்றும் அடிப்படை நிலையிலும், மைக்ரோ திட்டம் தீட்டப்பட்ட மாநகராட்சியில் பணியாற்றும் இளநிலைப் பொறியாளர்கள், சுகாதராரப் பணியாளர்கள் மற்றும் துப்புரவுப்பணியாளர்கள் ஆகியோர் குழுவாக அமைக்கப்பட்டு அனைத்து வார்டுகளிலும் கண்காணிப்புப் பணி தீவிரமாக மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் கரோனா நோய்ப் பரவலைக் கட்டுப்படுத்தி வெகு விரைவில் கரோனா நோய் இல்லாத மாநிலமாக மாற்ற எடுக்கப்பட்டுவரும் சீரிய நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் அனைவரும் உரிய ஒத்துழைப்பு நல்கி, அரசு கூறும் தடுப்பு நடவடிக்கைகளைப் பின்பற்ற வேண்டும்'' என்று அமைச்சர் காமராஜ் கேட்டுக்கொண்டார்.
கூட்டத்தில் பேசிய சுகாதாரத்துறைச் செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன், “முகாம்கள் அமைத்துப் பரிசோதிப்பது போன்ற மைக்ரோ திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படும். முகக்கவசம் அணிவது கடுமையாக்கப்படும். பொதுமக்கள் முதல்வர் அளிக்கும் வாய்ப்பை முழுமையாக பயன்படுத்திக்கொண்டு பாதிக்கப்பட்ட பகுதிகளில் சிகிச்சை, மற்றவர்களுக்குப் பரவாமல் தடுப்பது, பொதுமக்கள் முகக்கவசத்தை உயிர்க்கவசமாக நினைக்காமல் சமுதாயக் கவசமாக எண்ணி அணிய வேண்டும். உயிரிழப்பைத் தடுக்கும் விதத்தில் முதியவர்கள், நீண்டகால நோயுள்ளவர்களைக் கண்டறிந்து சிகிச்சை அளிக்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன” என்று தெரிவித்தார்.