

மறைந்த காந்தியவாதி சசிபெரு மாளின் மகன் விவேக் நேற்று இரண்டாவது நாளாக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட முயன்றதை அடுத்து, அவரை போலீஸார் கைது செய்து காவல் நிலையம் அழைத்துச் சென்றனர். காவல் நிலையத்திலும் அவர் தனது உண்ணாவிரத போராட்டத்தை தொடர்ந்தார்.
சேலம் மாவட்டம் இளம்பிள்ளை அருகே உள்ள இ.மேட்டுக்காடு பகுதியைச் சேர்ந்த சசிபெருமாள், கடந்த ஜூலை 31-ம் தேதி குமரி மாவட்டம் உண்ணாமலைக்கடையில் இயங்கி வந்த மதுக்கடையை அகற்றக்கோரி செல்போன் கோபுரத்தில் ஏறி போராட்டத்தில் ஈடுபட்டபோது உயிரிழந்தார். இதைத் தொடர்ந்து அவரது மகன் விவேக், மதுவிலக்கு கோரியும், தந்தையின் சாவு குறித்து நீதி விசாரணை நடத்த வேண்டியும் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டார்.
இந்நிலையில், நேற்று முன்தினம் விவேக் உள்ளிட்ட அவரது குடும்பத்தினர், தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் அல்லது முதல்கட்டமாக கோயில், பள்ளி, கல்லூரி அருகே உள்ள மதுக்கடைகளை அகற்ற வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து, கஞ்சமலை சித்தர்கோயில் அருகே உள்ள காந்தி சிலை முன்பு தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போலீஸாரின் அனுமதியின்றி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட சசிபெருமாள் சகோதரர் செல்வம், மகன்கள் விவேக், நவநீதன் உள்ளிட்ட ஐவரை நேற்று முன்தினம் மகுடஞ்சாவடி போலீஸார் கைது செய்து மாலையில் விடுவித்தனர். தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் முடியும் வரை தினமும் சசிபெருமாளின் குடும்பத்தினர் மதுவிலக்கை அமல்படுத்த வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடுவதாக அறிவித்து இருந்தனர். அதன்படி, நேற்று இரண்டாவது நாளாக செல்வம், வீட்டு அருகே உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டார்.
வீட்டில் கைது
சித்தர் கோயில் காந்தி சிலை அருகே உண்ணாவிரதம் இருப்பதற்காக வீட்டில் இருந்து விவேக் கிளம்பும்போது, அவரை மகுடஞ்சாவடி போலீஸார் கைது செய்தனர்.
காவல் நிலையத்தில் வைக்கப்பட்ட விவேக், போலீஸார் வாங்கிக் கொடுத்த உணவுகளை நேற்று முன்தினமும், நேற்றும் சாப்பிடாமல் உண்ணாவிரத போராட்டத்தை தொடர்ந்தார். தண்ணீர் மட்டுமே அருந்தி வருவதாக அவர் தெரிவித்தார். சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் முடியும் வரை பூரண மதுவிலக்கு வேண்டி உண்ணாவிரதம் இருக்கப் போவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.