Published : 15 Jun 2020 02:31 PM
Last Updated : 15 Jun 2020 02:31 PM

வரம் கொடுத்த கடவுள்; வழிவிட மறுக்கும் பூசாரிகள்- இன்னும் தீராத கேரள எல்லை இ-பாஸ் விவகாரம்

கரோனா பொதுமுடக்கத்துக்கு நடுவே மக்களின் அன்றாட வாழ்க்கைக்கு உதவும் வகையில் சில நடவடிக்கைகள் அறிவிக்கப்பட்டாலும், அவை நடைமுறைப்படுத்தப்படுவதில் இருக்கும் சிக்கல்கள் மக்களை ஏமாற்றத்துக்கு உள்ளாக்குகின்றன. சமீபத்தில், பாலக்காடு ஆட்சியர் அறிவித்த ‘அன்றாட இ-பாஸ்’ தொடர்பான உத்தரவும் அந்த ரகம்தான் என்று விரக்தியுடன் சொல்கிறார்கள் தமிழக- கேரள எல்லைப் பகுதிகளில் வசிக்கும் மக்கள்.

தமிழக - கேரள எல்லைக்குள் அன்றாடம் சென்று வருவதற்கு, விண்ணப்பித்த இரண்டே மணி நேரத்திற்குள் ‘அன்றாட இ-பாஸ்’ (Regular visit Pass) வழங்கப்படுவது குறித்து நேற்று முன்தினம் ‘இந்து தமிழ்’ இணையத்தில் செய்தி வெளியிட்டிருந்தோம். ஆட்சியரின் இந்த நடவடிக்கையால் எல்லையோர கிராமங்களில் வசிப்பவர்கள் நிம்மதியடைந்தனர்.

அந்த நிம்மதி ஓரிரு நாட்கள்கூட நீடிக்கவில்லை. தற்போது, ‘கடவுள் வரம் கொடுத்தாலும், பூசாரி தர மறுக்கிறார்’ எனும் கதையாக மாவட்ட ஆட்சியர் அனுமதித்தாலும் இங்குள்ள சோதனைச் சாவடிகளில் அனுமதி மறுக்கப்படுகிறது என்ற புலம்பல் இப்பகுதி மக்களிடம் ஒலித்துக்கொண்டிருக்கிறது.

கோவை மாவட்டத்தில் கேரள எல்லைப் பகுதிகளாக ஆனைகட்டி, வாளையாறு, நடுப்புணி, கோவிந்தாபுரம், வேலந்தாவளம், உழல்பதி, மூங்கில் மடை உள்ளிட்ட பல பகுதிகள் உள்ளன. இரு மாநில எல்லைக் கிராமங்களில் வசிப்பவர்கள், வியாபார நிமித்தம், வேலை நிமித்தம் எல்லை தாண்டி சென்றுவரும் வழக்கத்தை கரோனா பொதுமுடக்கம் முற்றிலும் சிதைத்துள்ளது.

இரண்டு மாநிலத்திற்குமான இடைவெளியில் 50 மீட்டர் தொலைவில் வசித்தாலும் அங்கிருந்து இங்கே, இங்கிருந்து அங்கே செல்ல இரு மாநில போலீஸாரும் விடுவதில்லை. இ-பாஸ் வாங்கினாலும் இதே நிலைதான் நீடித்தது. இதனால் நீண்ட தூரம் சுற்றுப்பாதைகளில் செல்ல வேண்டிய நிலை இருந்தது.

இதைக் கண்டித்து நடந்த போராட்டங்கள், இரு மாநில அரசு அதிகாரிகள், மக்கள் பிரதிநிதிகள் நடத்திய பேச்சுவார்த்தை ஆகியவற்றுக்குப் பின்னரே கடந்த வாரம் முதல், பாலக்காடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ‘அன்றாட இ-பாஸ்’ வழங்கப்பட்டது. விண்ணப்பித்த இரண்டே மணி நேரங்களில் பாஸ் கிடைத்ததால் மக்கள் மகிழ்ச்சியடைந்தனர். தவிர இந்தப் பகுதியிலிருந்து தமிழ்நாட்டிற்குள் சென்று வர 6 மாத காலத்திற்குச் செல்லுபடியாகும் வண்ணமும் இந்த இ-பாஸ் சேவை வழங்கப்பட்டு வருகிறது. எனினும், இத்தகைய பாஸ் பெற்றவர்களையும் சோதனைச் சாவடி வழியே விட மறுத்து போலீஸார் பிரச்சினை செய்தாகப் புலம்பித் தவிக்கின்றனர் மக்கள்.

உதாரணமாக, அன்றாட இ-பாஸ் பெற்றதால் நிம்மதியடைந்த மோகன்குமார், நடுப்புணி சோதனைச் சாவடி வழியே கொழிஞ்சாம்பாறையிலிருந்து பொள்ளாச்சி ஆச்சிப்பட்டிக்கு செல்ல முயற்சித்திருக்கிறார். அந்த வழியே போலீஸார் விட மறுத்துள்ளனர். ‘இந்த இ-பாஸில் எந்த சோதனைச் சாவடி என்று குறிப்பிடவில்லை. அதனால் வாளையாறு வழியாகவே திரும்பிச் செல்லவும். இப்போது இங்கே நாங்கள் விட்டாலும், திரும்பி வரும்போது அனுமதிக்க மாட்டோம். வாளையாறு வழியாகத்தான் வர வேண்டும். அப்படியே வந்தாலும் 14 நாள் வீட்டுத் தனிமையில் இருக்க வேண்டும்’ என்றெல்லாம் எச்சரித்துள்ளனர்.

“அந்த வழியில் சென்றால் 10 கிலோமீட்டர் பயணத்தில் என் ஊரை அடைந்து விடலாம். ஆனால், வாளையாறு வழியே என்றால் 80 கிலோமீட்டர் செல்ல வேண்டும். தவிர, மறுபடி 14 நாள் வீட்டுத்தனிமை என்றால் என்னால் சமாளிக்க முடியாது. அதனால், கொழிஞ்சாம்பாறைக்கே திரும்பி வந்துவிட்டேன்” என்கிறார் மோகன்குமார். இது போல அன்றாட இ-பாஸ் பெற்ற பலரும் பல்வேறு சோதனைச் சாவடிகள் வழியே திருப்பி அனுப்பப்படுகிறார்கள்.

இதுகுறித்து நம்மிடம் பேசிய கேரளத் தமிழ் பாதுகாப்பு இயக்கச் செயலாளர் மா.பேச்சிமுத்து, “சில போலீஸ்காரர்கள் அனுமதி வழங்குகிறார்கள். சிலர் மறுக்கிறார்கள். எனவே, நாம் டிஒய்எஸ்பி வரை பேச வேண்டியிருக்கிறது. சோதனைச் சாவடியில் இருக்கும் ஒரு போலீஸ்காரர் அனுமதித்தாலும் மறுநாள் வேறு போலீஸ்காரர்கள் காவலுக்கு வந்துவிடுகிறார்கள். அவர்கள் மீண்டும் அனுமதி மறுக்கிறார்கள். அவர்களிடம் சூழ்நிலையை விளங்கவைப்பதற்குள் போதும் போதுமென்றாகி விடுகிறது.

இப்போதைய இ-பாஸில் எல்லா சோதனைச் சாவடிகள் வழியாகவும் செல்லலாம் என்ற குறிப்பை அச்சடித்து தரச் சொல்லி மாவட்ட நிர்வாகத்திடம் வலியுறுத்தலாம் என்று உள்ளோம். இது தொடர்பாக, கேரள எல்லை சோதனைச் சாவடிகள் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தவும் திட்டமிட்டுள்ளோம்” என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x