

நெஞ்சுப் பகுதியையும், வயிற்றின் உள் உறுப்புகளையும் பிரிக்கும் 'உதரவிதானம்' இல்லாத பெண்ணுக்கு அறுவை சிகிச்சை மூலம் மீன் வலைபோன்ற செயற்கைத் தடுப்பை கோவை அரசு மருத்துவமனை மருத்துவர்கள் பொருத்தியுள்ளனர்.
கோவை சித்தாபுதூர், அய்யப்பன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் பாதரசி (58). இவருக்குக் கடந்த 3 ஆண்டுகளாக நெஞ்சு வலி, 6 மாதங்களாக மூச்சுத் திணறல் பிரச்சினை ஏற்பட்டு வந்துள்ளது. இதையடுத்து, அவர் கோவை அரசு மருத்துவமனை இதய அறுவை சிகிச்சைத் துறையில் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டார். அவரைப் பரிசோதித்துப் பார்த்ததில் வலதுபக்க உதரவிதானம் இல்லாமல் இருப்பதும், அதன் காரணமாகவே மூச்சுத் திணறல், நெஞ்சுவலி ஏற்படுவதும் தெரியவந்தது.
இதையடுத்து, இதய அறுவை சிகிச்சைத் துறைத் தலைவர் பேராசிரியர் டாக்டர் இ.சீனிவாசன், உதவிப் பேராசிரியர்கள் டாக்டர் மின்னத்துல்லா, டாக்டர் அரவிந்த், மயக்கவியல் துறை பேராசிரியர் டாக்டர் எஸ்.நர்மதா, உதவிப் பேராசிரியர் டாக்டர் பூங்குழலி, டாக்டர் கோபிநாத், செவிலியர்கள் பொற்கொடி, தெய்வக்கனி ஆகியோர் கொண்ட குழு, அறுவை சிகிச்சையை மேற்கொண்டது.
அப்போது, வயிற்றுப் பகுதிக்கும் நெஞ்சுப்பகுதிக்கும் இடையே தடுப்பை ஏற்படுத்த மீன் வலை போன்ற பொருள் (Prolene mesh), அறுவை சிகிச்சை மூலம் பொருத்தப்பட்டது. சிகிச்சை முடிந்து நலமுடன் அந்தப் பெண்மணி வீடு திரும்பியுள்ளார்.
அரிதினும் அரிது
இது தொடர்பாக மருத்துவமனையின் டீன் டாக்டர் பி.காளிதாஸ் கூறும்போது, "நெஞ்சையும், வயிற்றுப் பகுதியையும் பிரிக்கும் தசை போன்ற பகுதிக்கு உதரவிதானம் என்று பெயர். வயிற்றுப் பகுதியில் உள்ள உறுப்புகளை நெஞ்சுகூட்டுக்குள் செல்லாமல் தடுப்பதே இதன் பணி.
பாதரசிக்கு வலதுபுற உதரவிதானமே இல்லை. இது அரிதினும் அரிதான நிகழ்வு. உதரவிதானமே இல்லாததால் வயிற்றுப் பகுதியில் உள்ள உறுப்புகளால் இதயம், நுரையீரல் போன்றவற்றுக்கு அழுத்தம் ஏற்பட்டது. இதையடுத்து, முதலமைச்சரின் விரிவான காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் இலவசமாக அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது" என்றார்.