

அகில இந்திய மருத்துவ இட ஒதுக்கீட்டில் ஓபிசி மாணவர்கள் புறக்கணிக்கப்பட்ட விவகாரம் குறித்த வழக்கில் உச்ச நீதிமன்ற அறிவுறுத்தல்படி உயர் நீதிமன்றத்தில் திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் தாக்கல் செய்துள்ள மனுக்கள் மீதான விசாரணை நாளை நடைபெற உள்ளது.
தமிழகத்தில் இளநிலை மருத்துவப் படிப்பு, முதுநிலை மருத்துவப் படிப்புகளில் அகில இந்திய இட ஒதுக்கீட்டில் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவு மாணவர்களுக்கான 50 சதவீத இட ஒதுக்கீட்டை அமல்படுத்த தமிழக அரசு, திமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி, வைகோ சார்பில் தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனுக்கள் சமீபத்தில் விசாரணைக்கு வந்தன.
நாடு முழுவதும் இளநிலை மருத்துவப் படிப்பு, முதுநிலை மருத்துவப் படிப்புகளில் அகில இந்திய இட ஒதுக்கீட்டில் இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கான 27 சதவீத இட ஒதுக்கீட்டை அமல்படுத்த உத்தரவிடக் கோரி அன்புமணி ராமதாஸ் தாக்கல் செய்த ரிட் மனு உள்ளிட்ட பல மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் நீதிபதி நாகேஸ்வர ராவ் தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தன.
“இட ஒதுக்கீடு அடிப்படை உரிமையின் கீழ் வராது. எனவே, இந்த மனுவை நாங்கள் விசாரணைக்கு எடுக்க மாட்டோம். மருத்துவப் படிப்புக்காக அகில இந்தியத் தொகுப்புக்கு தமிழகம் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு அளிக்கும் இடங்களில் 50% தமிழக ஓபிசி பிரிவினருக்கு ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்ற கோரிக்கை தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தை அணுகுங்கள்'' என உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியது.
இதனையடுத்து அனைத்து மனுக்களும் வாபஸ் பெறப்பட்டன. தமிழகத்தில் இளநிலை மருத்துவப் படிப்பு, முதுநிலை மருத்துவப் படிப்புகளில் அகில இந்திய இட ஒதுக்கீட்டில் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவு மாணவர்களுக்கான 50 சதவீத இட ஒதுக்கீட்டை அமல்படுத்தக் கோரி உயர் நீதிமன்றத்தை நாட தமிழக அரசியல் கட்சிகளுக்கு உச்ச நீதிமன்றம் அனுமதியளித்து உத்தரவிட்டது.
உச்ச நீதிமன்ற அனுமதியை அடுத்து அகில இந்திய மருத்துவப் படிப்பு இட ஒதுக்கீட்டில் ஓபிசி மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு கோரி திமுக, அதிமுக, திக, மதிமுக, பாமக, இடதுசாரிக் கட்சிகள் சார்பில் உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அதிமுக சார்பில் அமைச்சர் சி.வி. சண்முகம் வழக்கைத் தாக்கல் செய்தார். ஏற்கெனவே இதேபோன்று திமுக, திராவிடர் கழகம், மதிமுக உள்ளிட்ட கட்சிகள் மனுத்தாக்கல் செய்துள்ளன.
இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் சுப்பையா மற்றும் கிருஷ்ணன் ராமசாமி அடங்கிய அமர்வு முன் ஆஜரான மனுதாரர்கள் ((திமுக, பாமக, அதிமுக)) தரப்பு வழக்கறிஞர்கள் பலரும் ஆஜராகி வழக்கை விசாரணைக்கு எடுக்க வேண்டும் என முறையீடு வைத்தனர்.
இந்த முறையீடுகளை கேட்ட நீதிபதிகள், மருத்துவப் படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு கோரிய வழக்குகளை நாளை ((ஜூன் 15)) விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக தெரிவித்தனர்.
இந்த வழக்குகள் அனைத்தும் நாளை சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படுகிறது.