Published : 15 Jun 2020 10:36 AM
Last Updated : 15 Jun 2020 10:36 AM

கரோனா தொற்று; 19 பேர் கொண்ட மருத்துவ நிபுணர்கள் குழுவுடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனை: அமைச்சரவைக் கூட்டமும் தொடர்ந்து நடக்கிறது

சென்னை

தமிழகத்தில் அதிகரித்து வரும் கரோனா தொற்று, சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் அதிகமாகும் தொற்று, அடுத்தகட்ட நடவடிக்கை ஆகியவை குறித்து 19 பேர் கொண்ட மருத்துவ நிபுணர் குழுவுடன் முதல்வர் பழனிசாமி இன்று காலை 11 மணிக்கு ஆலோசனை நடத்துகிறார். தொடர்ந்து அமைச்சரவைக் கூட்டமும் நடக்கிறது.

தமிழகத்தில் கரோனா தொற்றுப் பரவலை அடுத்து பல்வேறு நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது. அதன்படி தலைமைச் செயலரை தலைவராகக் கொண்ட டாஸ்க் ஃபோர்ஸ் அமைக்கப்பட்டது. அதன் கீழ் துறைவாரியாக ஐஏஎஸ் அதிகாரிகள் குழு அமைக்கப்பட்டது. அதேபோன்று பொருளாதாரப் பிரச்சினைகளைச் சரிசெய்ய முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநர் சி.ரங்கராஜன் தலைமையில் பொருளாதார நிபுணர்கள் அடங்கிய குழு அமைக்கப்பட்டது.

அதேபோன்று ஐசிஎம்ஆர் துணை இயக்குனர் பிரதீப் கவுர் தலைமையில் 19 பேர் கொண்ட மருத்துவ நிபுணர்கள் குழு அமைக்கப்பட்டது. ஒவ்வொரு ஊரடங்கு நிறைவுபெறும்போதும் இந்தக் குழு முதல்வர், சுகாதாரத் துறை அமைச்சர், அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி அடுத்து மேற்கொள்ள வேண்டிய நிலை குறித்த ஆய்வறிக்கையை அளிக்கும்.

தற்போது ஐந்தாம் கட்ட ஊரடங்கு ஜூன் 30-ம் தேதி முடிவடைய உள்ள நிலையில் தமிழகத்தில் குறிப்பாக சென்னையில் பாதிப்பு அதிக அளவில் உள்ளதும், உயிரிழப்பு அதிகரிப்பதும் அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. சென்னையிலிருந்து மற்ற மாவட்டங்களுக்குத் தொற்று பரவாமல் இருக்க சென்னையைத் தனிமைப்படுத்த வேண்டும் என்பது அனைவரின் கோரிக்கையாக உள்ளது.

அதேபோல் சென்னையில் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள 5 மண்டலங்களையாவது தனிமைப்படுத்தி நிவாரணம் வழங்க வேண்டும் என ஸ்டாலின் உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர். இந்நிலையில் தற்போதுள்ள சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு இன்று காலை 11 மணிக்கு மருத்துவ நிபுணர் குழுவுடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனை நடத்துகிறார்.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் தலைமைச் செயலர், சுகாதாரத்துறைச் செயலர் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொள்கின்றனர். தமிழகத்தில் குறிப்பாக சென்னையில் கரோனா தடுப்பு நடவடிக்கை பிரதானமாக இருக்கும் எனத் தெரிகிறது. நிபுணர் குழு ஊரடங்கு முடியும் நேரத்தில் ஆய்வறிக்கையை அளிக்கும். ஆனால், இடையிலேயே ஆலோசனைக் கூட்டம் நடக்கிறது. அதேபோன்று நிபுணர்குழு கூட்டம் முடிந்தவுடன் அமைச்சரவைக் கூட்டம் நடக்கிறது.

அமைச்சரவைக் கூட்டத்தில் தமிழகத்தின் கரோனா, சென்னை உள்ளிட்ட மண்டலங்களில் கரோனா தடுப்பு நடவடிக்கை குறித்த ஆலோசனை பிரதானமாக இருக்கும் எனத் தெரிகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x