

மதுரை தெற்குவாசல், நகர் மகளிர் காவல் நிலைய வளாகங்களில் சைல்டு பிரண்ட்ஸ் கார்னர் என்ற பெயரில் சிறுவர், சிறுமியர், குழந்தைகள் ஆகியோரைக் கவரும் வகையில் மதுரை லேடீஸ் கிளப் சர்க்கிள்-8 அமைப்பு சார்பில் விளையாட்டுப் பூங்காக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
குழந்தைகளைக் கவரும் வகையில் மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் மற்றும் விசாரணை அதிகாரியின் அறைகளின் சுவர்களில் வண்ண, வண்ண ஓவியங்களும் வரையப் பட்டுள்ளன. விளையாட்டுச் சாதனங்கள், சிறுவர் காமிக்ஸ் புத்தகங்கள், பொம்மைகள் இடம் பெற்றுள்ளன. இப்பூங்காக்களை நகர்காவல் ஆணையர் டேவிட்சன் தேவாசீர் வாதம் திறந்து வைத்தார். இது குறித்து போலீஸார் கூறும்போது, குடும்பப் பிரச்சினைக்கு தீர்வு காண மகளிர் காவல் நிலையங்களுக்கு குழந்தைகளுடன் பெற்றோர் வருகின்றனர்.
அப்போது குழந்தைகளை இப்பூங்காவில் விளையாடச் செய்வதோடு, பிரச்சினைகளுடன் வரும் பெற்றோர்களின் மனநிலையை மாற்றியமைக்கும் விதமாகவும் இப்பூங்காக்கள், ஓவியங்களை இடம்பெறச் செய்துள்ளோம் எனத் தெரிவித்தனர். இந்நிகழ்ச்சியில் மதுரை லேடீஸ் கிளப் சர்க்கிள்-8 தலைவர் சுகன்யா ரகுராம், விசாலாட்சி, மீனா மற்றும் துணை ஆணையர் கார்த்திக், கூடுதல் துணை ஆணையர் ஜானகிராமன், ஆய்வாளர் அனுசியா ஆகியோர் கலந்து கொண்டனர்.