Published : 15 Jun 2020 06:46 AM
Last Updated : 15 Jun 2020 06:46 AM

கரோனா ஆய்வகங்களில் விவரங்கள் சேகரிப்பில் குறைபாடு; தொற்று உறுதி செய்யப்பட்ட 270 பேரைக் காணவில்லை- போலீஸ் உதவியுடன் தேடுகிறது சென்னை மாநகராட்சி

சென்னையில் உள்ள கரோனா பரிசோதனை ஆய்வகங்களில் பரிசோதனைக்கு வருவோரின் விவரம் சேகரிப்பில் இருந்த குறைபாடு காரணமாக, தொற்று உறுதி செய்யப்பட்டவர்களில் 270-க்கும் மேற்பட்டோரை கண்டுபிடித்து, அவர்களின் தொடர்புகளை சோதனைக்குள்ளாக்க முடியாமல் மாநகராட்சி நிர்வாகம் சிக்கலை சந்தித்து வருகிறது.

சென்னையில் 28 அரசு மற்றும் தனியார் கரோனா பரிசோதனை ஆய்வகங்கள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் கரோனா பரிசோதனைக்கு வருவோர் விவரங்களை சேகரிப்பதில் குறைபாடு இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் தொற்று உறுதி செய்யப்பட்ட பின் அவர்களை கண்டுபிடிப்பது மற்றும் அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை பரிசோதிப்பது மாநகராட்சிக்கு பெரும் சிக்கலாக உள்ளது. குறிப்பாக தனியார் ஆய்வகங்களில் போதிய விவரங்களை பெறாமல் கரோனா பரிசோதனை செய்வதாக மாநகராட்சி அதிகாரிகள் புகார் தெரிவித்து வருகின்றனர்.

தொற்று உறுதியான பின், ஆய்வகங்கள் அளிக்கும் முகவரி அடிப்படையில், மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வு செய்தால், அவர்கள் போலியான முகவரிகளை வழங்கியிருப்பது தெரியவருகிறது.

இவ்வாறு கடந்த மே 23-ம் தேதி முதல் ஜூன் 10-ம் தேதி வரை தொற்று உறுதி செய்யப்பட்ட சுமார் 270 பேருக்கு மேல் சரியான முகவரி இல்லாமல் கண்டுபிடிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இவர்களை கண்டு பிடிக்க காவல்துறை உதவியை மாநகராட்சி நிர்வாகம் நாடியுள்ளது. இவர்களை கண்டுபிடிக்கும் முயற்சியில் இணையக் குற்றத் தடுப்பு போலீஸார் ஈடுபட்டு வருகின்றனர்.

இதற்கிடையில், அனைத்து ஆய்வகங்களும் கரோனா பரிசோதனைக்கு வருபவரிடம் சரியான முகவரி, ஆதார் எண், கைபேசி எண் ஆகியவற்றை பெற வேண்டும். அதே இடத்தில் கைபேசி எண்ணை தொடர்பு கொண்டு, பரிசோதனைக்கு வந்தவருடையது தானா என்பதை உறுதி செய்ய வேண்டும். அவருடன் தொடர்பில் இருந்தவர்கள் விவரங்களையும் சேகரித்து, சுய விவர படிவமாக தயாரித்து, சோதனைக்கு வருவோரிடம் கையெழுத்தும் பெற வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு அறிவுறுத்தல்களை பரிசோதனை ஆய்வகங்களுக்கு மாநகராட்சி நிர்வாகம் வழங்கியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x