

சேலத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த தூய்மைப் பணியாளரின் மனைவி உயிரிழந்தது மக் களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
சேலத்தில் கரோனா தொற்றினால் இதுவரை 222 பேர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இதில், பலர் குணமடைந்து வீடு திரும்பினர்.
இந்நிலையில், சேலம் மாநகராட்சி தூய்மைப் பணியாளரின் 45 வயதுடைய மனைவிக்கு கரோனா தொற்று ஏற்பட்டு, சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார்.
இதனையடுத்து, தூய்மைப் பணியாளருக்கும், அவரது மகன், மகளுக்கும் கரோனா பரிசோதனை செய்ததில், அவர்களும் தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதனிடையே, நேற்று முன்தினம் இரவு சிகிச்சை பலனின்றி தூய்மைப் பணியாளரின் மனைவி உயிரிழந்தார்.
இது தொடர்பாக சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறும்போது, “தூய்மைப் பணியாளரின் மனைவி, இ-பாஸ் பெறாமல் வெளியூர் சென்று வந்தார். ஏற்கெனவே அவர் ஆஸ்துமா பிரச்சினை இருந்த நிலையில், அவர் கரோனா தொற்றால் உயிரிழந்தார்” என்றனர்.
சேலத்தில் கரோனா தொற்றுக்கு முதல் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. இச்சம்பவம் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.